நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன. இத்தகைய சூழலில் கச்சத்தீவு விவகாரத்தை பா.ஜ.க. தற்போது கையிலெடுத்து காங்கிரசையும், தி.மு.க.வையும் கடுமையாக விமர்சித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ் மற்றும் திமுக, ‘10 ஆண்டுகால ஆட்சியில் கச்சத்தீவை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?’ என பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி வருகிறது.
இந்த நிலையில், கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து இலங்கை அமைச்சர் டக்ளஸ் கூறுகையில், “இந்திய மீனவர்கள் படகுகளைப் பயன்படுத்தி இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக மீன்பிடிக்க வருகின்றனர். இந்திய மீனவர்களால் இலங்கையின் கடல் வளம் அழிக்கப்படுகிறது.
இந்தியாவில் தேர்தல் காலங்களில் கச்சத்தீவு பற்றிய கோரிக்கைகள் மற்றும் எதிர் உரிமைகோரல்களின் சத்தம் கேட்பது அசாதாரணமானது அல்ல. இலங்கை மீனவர்கள் அந்தப் பகுதிக்குள் நுழைய முடியாது என்பதையும், அந்த வளமான பகுதியில் இலங்கை எந்த உரிமையையும் கோரக்கூடாது என்பதையும் உறுதிப்படுத்துவதற்காக இந்தியா செயல்படுகிறது என்று நான் நினைக்கிறேன். இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப வழங்குவது என்பது சாத்தியமற்றது. எனவே, கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது. கச்சத்தீவை திரும்ப வழங்குவதாக இருந்தால் இலங்கையின் கடல்வளம் முற்றிலுமாக சூறையாடப்படும்” என்று கூறினார்.