ஆப்கானிஸ்தானில் இசைக்கு தடை விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள தலிபான் அமைப்பு , கடந்த கால ஆட்சியை போல இம்முறை தங்கள் ஆட்சியில் கெடுபிடிகள் இருக்காது எனத் தெரிவித்துள்ளது. ஆனால், அங்கிருந்து ஆப்கான் மக்கள் வெளியேறுவதில் மும்முராக இருக்கிறார்கள்.
அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள், ஆப்கானிஸ்தானில் வீடு வீடாக தேடப்படுகின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பொதுமக்கள் அச்சுறுத்தப்படுகின்றன. இப்படி, பல்வேறு செய்திகளுக்கு மத்தியில், நியூயார்க் டைம்ஸ்- க்கு பேட்டியளித்திருக்கிறார் தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித். அப்போது அவர், 1996- ஆம் ஆண்டு முதல் 2001- ஆம் ஆண்டு காலகட்டத்தில் இருந்ததுபோல், இப்போது தலிபான்கள் கெடுபிடியுடன் இருக்க மாட்டார்கள் என உறுதியளித்துள்ளார். அதேநேரத்தில், சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். அதன்படி, ஆப்கானிஸ்தானில் இசைக்கு தடை விதிக்கப்படும் எனத் தெரிவித்தவர், பெண்கள் பயணம் மேற்கொள்ளும் போது ஆண் துணை கட்டாயம் என்றும், கண்கள் மட்டும் தெரியும் படி உடை அணியும் பெண்கள் பள்ளிக்கும், பணிக்கும் அனுமதிக்கப்படுவர் எனவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த ஆட்சியைப் போல் தலிபான்கள் பெண்களை வீட்டை விட்டு வெளியேற அனுமதிப்பதில்லை; அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் பழிவாங்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளை தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
ஆனாலும், ஆப்கானிஸ்தான் மக்கள் காபூல் விமான நிலையம் நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13,400 பேர் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி இருப்பதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டைவிட்டு வெளியேற காபூல் விமான நிலையத்தில் காத்திருக்கிறார்கள். என்னதான் கெடுபிடி இருக்காது என தலிபான்கள் உறுதியளித்தாலும், ஆப்கான் மக்களிடையே அச்சம் விலகியதாக தெரியவில்லை.