
17 வயது இளம்பெண்ணுக்கு, திருமணமான 22 நாட்களில் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார், இந்தோனேசியாவைச் சேர்ந்த 78 வயது முதியவர்.
இந்தோனேசியாவைச் சேர்ந்த அபா சர்னா (78 வயது), நோனி நவிதா (17 வயது) இருவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. அதிக வயது வித்தியாசம் இருந்தாலும் இருவீட்டாரின் சம்மதத்தோடு நடைபெற்ற இந்தத் திருமணத்தில் மணமகனுக்கு வரதட்சணையாக, இந்திய மதிப்பில் ரூ.50 ஆயிரம் ரொக்கம், மோட்டார் சைக்கிள், கட்டில், மெத்தை ஆகியவைக் கொடுக்கப்பட்டது. திருமணமான இந்தத் தம்பதி மூன்று வாரங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்த சூழலில், திடீரென அபா சர்னா தரப்பிலிருந்து நோனி நவிதாவிற்கு விவாகரத்து நோட்டீஸ் வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த நோனி நவிதா மற்றும் அவரது குடும்பத்தினர் இதுகுறித்து அபா சர்னாவிடம் கேள்வியெழுப்பியபோது, தன் மனைவி திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்ததாகவும், இதை மறைத்துத் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் கூறியுள்ளார். ஆனால், அபா சர்னாவின் இந்தக் குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்துள்ள நோனி நவிதா குடும்பத்தினர், "இரண்டு பேருக்கும் இடையில் எந்தச் சண்டை சச்சரவும் இல்லை. எங்கள் குடும்பத்தினரும் அவருடன் நன்றாகத்தான் நடந்துகொண்டார்கள். ஆனால் சர்னாவும், அவர் குடும்பத்தினரும் குற்றம் கண்டுபிடிக்க வழித் தேடுகிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.