இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 8 நாட்களாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. காசாவிற்கு கொடுக்கும் பதிலடி ஹமாஸ் அமைப்பிற்கு மட்டுமல்ல, நமது எதிரிகள் கூட மறக்க முடியாத நினைவாக இருக்க வேண்டும் என்று இஸ்ரேல் தெரிவித்து அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினரை விட ஆயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீன மக்கள் கொள்ளப்படுவதாக ஐ.நா கவலை தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், பாலஸ்தீன - அமெரிக்க சிறுவன் ஒருவனை அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் 26 முறை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அமெரிக்காவின் சிகாகோ நகரின் மேற்கு பகுதியில் 32 வயது பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். அவருக்கு 6 வயதில் ஒரு மகன் இருந்துள்ளார். இவர்கள் இருவரும் வாடகை வீடு ஒன்றில் தனியாக வசித்து வந்துள்ளனர். இவர்கள் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இவர்களுடைய வீட்டின் உரிமையாளர் ஜோசப் ஸூபா(71) என்பவர் வீட்டிற்கு வந்து பெண்ணை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல், அந்த 6 வயது சிறுவனை 26 முறை கத்தியால் குத்தியுள்ளார் தனது வெறிச் செயலை காண்பித்துள்ளார். இந்த தகவல் அறிந்த அமெரிக்கா காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து காயப்பட்ட இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதனையடுத்து, அந்த சிறுவனின் தாயார் தற்போது காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இதனை தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வந்த காவல்துறையினருக்கு வீட்டின் உரிமையாளர் தான் கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. மேலும், அவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து அமெரிக்கா அதிகாரிகள் கூறுகையில், “பாதிக்கப்பட்டவர்கள் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், மத்திய கிழக்கு நாடுகளின் நடைபெற்று வரும் இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரால் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கலாம் சந்தேகிப்பதாக” கூறுகின்றனர். இதனையடுத்து, கொலை செய்த வீட்டின் உரிமையாளர் மீது கொலை மற்றும் வெறுப்பு ஆகிய சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவத்திற்கு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.