பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்துக்குட்பட்டது கில்லா சைபுல்லா மாவட்டம். இந்த மாவட்ட எல்லை வழியாக செல்லும் ஓர் சாலையில் பேருந்தும், டேங்கர் லாரியும் செல்லும்போது, எதிர்பாராத விதமாக அந்த இரண்டு வாகனங்களுக்கு நேருக்கு நேர் மோதி கொண்டன. இதில் பேருந்தும், டேங்கர் லாரியும் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீயணைப்புப் படை வீரர்கள் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
இதுகுறித்து பலூசிஸ்தான் மாகாண காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, "டேங்கர் லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், இரு வாகனங்களும் தீப்பிடித்து பள்ளத்தில் கவிழ்ந்தன. இந்த விபத்தில் 15 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக ஒருவர் மட்டும் பேருந்தின் ஜன்னல் வழியே குதித்து உயிர் தப்பினார். இந்த கொடூர விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது" என அவர்கள் தெரிவித்தனர்.