அமெரிக்காவில் கரோனாவுக்குச் சிகிச்சை பெற்றுக் குணமடைந்த ஒருவருக்கு 1.1 மில்லியன் டாலர்களுக்குப் பில் போட்டுக் கொடுத்துள்ளது மருத்துவமனை ஒன்று.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரைச் சேர்ந்த 70 வயதான மைக்கேல் ஃப்ளோர் என்பவர் இஸ்ஹாக் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடத்த 62 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளார். இந்நிலையில் கரோனா குணமடைந்து வீடு திருப்பத் தயாரான அவருக்குச் சிகிச்சை செலவுகளுக்கான மருத்துவமனை பில் தரப்பட்டுள்ளது.
181 பக்கங்கள் கொண்ட அந்த பில்லில் 3,000 மேற்பட்ட உபகரணங்களுக்கான கட்டணம், அறை வாடகை, மருந்து செலவுகள் உட்பட மொத்தம் 1.12 மில்லியன் டாலர் (இந்திய மதிப்புள்ள சுமார் 8.1 கோடி ரூபாய்) செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள மைக்கேல் ஃப்ளோர், "உயிர் பிழைத்ததில் நான் குற்ற உணர்ச்சியுடன் இருக்கிறேன், ஏன் எனக்கு இவ்வாறு நடக்க வேண்டும்?' இதற்கெல்லாம் நான் தகுதியானவனா? என வருத்தத்துடன் கருத்துத் தெரிவித்துள்ளார்.