Skip to main content

கோகுல்ராஜ் கொலை வழக்கு;நீதிமன்றத்திலேயே சாட்சியை மிரட்டிய யுவராஜ்! நீதிபதி கடும் எச்சரிக்கை!!

Published on 31/10/2018 | Edited on 31/10/2018

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள யுவராஜ், குற்றவாளி கூண்டிற்குள் இருந்து  கொண்டே அரசுத்தரப்பு சாட்சியை தலையசைவுகள் மூலம் மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 Yoguraj threatens witness to Gokulraj murder case Judge's heavy warning


சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ் (23). பொறியியல் பட்டதாரி. 23.6.2015ம் தேதியன்று, பரமத்தி வேலூரைச் சேர்ந்த, தன்னுடன் படித்து வந்த தோழி சுவாதியை பார்த்து வருவதாக வீட்டில் இருந்து கிளம்பிய அவர், மறுநாள் மாலையில் நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

 

 Yoguraj threatens witness to Gokulraj murder case Judge's heavy warning


கொங்கு வெள்ளாள கவுண்டர் சாதியைச் சேர்ந்த சுவாதியும், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜூம் காதலிப்பதாக கருதிய ஒரு கும்பல், அவரை ஆணவக்கொலை செய்திருக்கலாம் என தகவல்கள் கிளம்பின. இந்த வழக்கு தொடர்பாக சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவருடைய தம்பி தங்கதுரை, கார் ஓட்டுநர் அருண் உள்ளிட்ட 17 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். 

 


வழக்கு நடந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில் கைதானவர்களில் ஜோதிமணி என்ற பெண் சுட்டுக் கொல்லப்பட்டார். அமுதரசு என்பவர் தலைமறைவாகிவிட்டார். கடந்த 30.8.2018ம் தேதி முதல் இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை, நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி கே.ஹெச். இளவழகன் முன்னிலையில் நடந்து வருகிறது.

 


யுவராஜ் வகையறா தரப்பில், மூத்த வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூவும், அரசுத்தரப்பில் மூத்த சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதி ஆகியோரும் ஆஜராகி வாதாடி வருகின்றனர்.

 

 Yoguraj threatens witness to Gokulraj murder case Judge's heavy warning


கடந்த 22.10.2018ம் தேதி நடந்த சாட்சிகள் விசாரணையின்போது எஸ்கார்ட் போலீசார் பற்றாக்குறை காரணமாக கோவை மத்திய சிறையில் இருந்து யுவராஜ் மட்டும் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படவில்லை. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 30, 2018) நடந்த விசாரணைக்கு யுவராஜ் உள்ளிட்ட 15 பேரும் ஆஜராகினர்.

 


அரசுத்தரப்பு சாட்சியான, சேலம் மாவட்டம் இளம்பிள்ளையைச் சேர்ந்த நெசவுத்தொழிலாளியான குமார் என்பவரை சாட்சி சொல்ல அழைத்தனர். 


கோகுல்ராஜ் கொல்லப்பட்டதாகச் சொல்லப்பட்ட காலக்கட்டத்தில் தனது மாமனாருக்குச் சொந்தமான ஜெயசூர்யா காபி பாரில் வேலை செய்து வந்ததாகவும், அந்தக்கடையில் டீ, காபி மட்டுமின்றி பீடி, சிகரெட், சில மளிகைப் பொருள்கள், பேனா, பென்சில், மார்க்கர் உள்ளிட்ட எழுது பொருள்களும் விற்பனை செய்யப்பட்டு வந்ததாக குமார் வாக்குமூலம் அளித்தார். 

 


அந்தக் கடையில் பேப்பர் (காகிதம்) விற்கப்படுமா? என்று அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதி கேட்டதற்கு, பேப்பர் தவிர பிற எழுதுபொருள்கள் விற்கப்படும் என குமார் கூறினார். குற்றவாளி கூண்டில் நிற்பவர்களில் யாரையாவது தெரியுமா? எனக்கேட்டதற்கு, 'யாரையுமே தெரியாது' என பதில் அளித்தார். இந்த வழக்கைப் பற்றி ஏதாவது தெரியுமா? என்றதற்கும் தெரியாது என பதில் சொன்னார்.

 

 Yoguraj threatens witness to Gokulraj murder case Judge's heavy warning


அவர் குற்றவாளி கூண்டில் இருக்கும் யுவராஜ் உள்ளிட்ட தரப்பினரை பார்த்துப் பார்த்து பேசியதால், சந்தேகம் அடைந்த நீதிபதி கே.ஹெச். இளவழகன், 'நீங்கள் யாரைப் பார்த்தாவது பயந்துகொண்டு இப்படி சொல்கிறீர்களா? என்று கேட்டார். அதற்கு குமார், 'இல்லை' என கூறினார். ஆனால் சாட்சியம் அளித்து முடித்து, கூண்டை விட்டு இறங்கும் வரையிலும் அவர் இறுக்கமாகவே இருந்தார்.

 


இந்நிலையில் குற்றவாளிகள் கூண்டில் நின்று கொண்டிருந்த முதல் குற்றவாளியான யுவராஜ், அரசுத்தரப்பு சாட்சி குமாரை பார்த்து தலையாட்டினார். அதை நுட்பமாகக் கவனித்துவிட்ட நீதிபதி இளவழகன், யுவராஜை பார்த்து, 'இப்படி சாட்சியைப் பார்த்து தலையை எல்லாம் ஆட்டி மிரட்டிக்கொண்டிருந்தால் கடும் ஆக்ஷன் எடுக்க வேண்டியது வரும். நீங்கள் அங்கிருந்து கொண்டு என்னென்ன செய்கிறீர்கள் என்பதெல்லாம் ரெக்கார்டு ஆகிக்கொண்டுதான் இருக்கிறது. 

 

 Yoguraj threatens witness to Gokulraj murder case Judge's heavy warning


எனக்கு மேலே பாருங்க.... கேமரா இருக்குதா? (அப்போது யுவராஜ், கேமரா இருக்கிறது என்பதைச் சொல்லும் விதமாக தலையசைத்தார்) நீங்கள் தலையை ஆட்டியதெல்லாம் போட்டுக்காட்டட்டுமா?' என கடுமையாக எச்சரித்தார். அதற்கு யுவராஜ், 'சாரி'ங்கய்யா... இனிமே ஆட்டமாட்டேங்கய்யா என தலையை இருபுறமும் ஆட்டியபடி பதில் சொன்னார். இதனால் விசாரணை அரங்கத்தில் ஓரிரு நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.

 


அரசுத்தரப்பு வழக்கறிஞர் கருணாநிதி, 'உங்கள் கடைக்கு எதிரி அருண் என்பவர் அடிக்கடி வந்து சிகரெட் வாங்குவதன் மூலம் அவர் உங்களுக்கு அறிமுகம் ஆனார்?,'; அருண் உங்கள் கடைக்கு எப்போது வந்தாலும் கிங் சைஸ் எனப்படும் சிகரெட்டுதான் வாங்கிச்செல்வார்?; 23.6.2015ம் தேதியன்று உங்கள் கடைக்கு வந்த அருண், இரண்டு பேனா தருமாறு கேட்டார். அதற்கு நீங்கள் எப்போதும் கிங் சைஸ் சிகரெட்டுதானே வாங்குவீங்க? இப்போது என்ன இரண்டு பேனா கேட்கிறீர்கள்? எனக்கேட்டுவிட்டு அவரிடம் இரண்டு பேனா கொடுத்தீர்கள். அதற்கு அவரிடம் இருந்து பத்து ரூபாய் பணமும் பெற்றுக்கொண்டீர்கள்? ஆகிய கேள்விகள் கேட்கப்பட்டன. அவை அனைத்திற்குமே குமார், தெரியாது என்றே பதில் அளித்தார்.

 


எதிரிகளுக்கு பயந்தும், அவர்கள் கேட்டுக்கொண்டதன் பேரிலும் நீங்கள் இப்போது பொய் சாட்சியம் அளிக்கிறீர்கள் என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் கேட்டார். அதற்கு குமார், இல்லை என்று பதில் அளித்தார். குமார், பிறழ் சாட்சியம் அளித்தால் அவரிடம் எதிர்தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்யவில்லை.
 

சார்ந்த செய்திகள்