
பட்டப்பகலில் கல்லூரி மாணவியை, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் மின்னாம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண். இவர் அங்குள்ள ஒரு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில், இன்று (16-04-25) காலை இந்த மாணவி சேலம் பழைய பேருந்து நிலையத்தில் கல்லூரி செல்வதற்காக காத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர், மாணவியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த நிலையில், திடீரென்று அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியின் வயிற்றில் குத்தியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள், உடனடியாக இளைஞரை பிடிக்க தொடங்கினர். உடனடியாக இளைஞர் தனது கையில் அறுத்துக் கொண்டு தற்கொலை முயன்றார். ரத்த வெள்ளத்தில் கிடந்த இரண்டு பேரையும் உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், இச்சம்பவம் குறித்து போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சேலம் டவுன் போலீசார் விரைந்து சென்று இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், மாணவியை கத்தியால் குத்திய இளைஞர் சேலம் மாவட்டம் ஆட்டாயம்பட்டியைச் சேர்ந்த மோகன பிரியன் என்பது தெரியவந்தது. மோகன பிரியனுக்கும், கல்லூரி மாணவிக்கும் இடையே சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம், நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது.
ஆனால், இருவரும் நேரில் சந்தித்த போது, தன்னை விட 1 வயது சிறியவர் என்பதாலும், ஐஐடி முடித்து வேலை தேடி வருவதாலும் மோகன பிரியனை தனக்கு பிடிக்கவில்லை என்று கல்லூரி மாணவி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் மோகன பிரியன், கல்லூரி மாணவியை ஒருதலை காதல் செய்து வந்துள்ளார். இதற்கிடையில், கல்லூரி மாணவிக்கு உறவினர் ஒருவருடன் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை அறிந்து ஆத்திரமடைந்த மோகன பிரியன், இன்று காலை பேருந்து நிலையத்தில் வைத்து கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி தாக்கியுள்ளார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.