சிவகாசி, மீனம்பட்டியைச் சேர்ந்த சுப்புத்தாய் இருபது வருடங்களுக்கு முன் கணவனை இழந்தவர். இவருடைய இரண்டு பெண்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. 22 வயது மகன் சக்திவேலுக்கு மட்டும் திருமணம் ஆகவில்லை. சுப்புத்தாயும் மகன் சக்திவேலும் பட்டாசு ஆலை ஒன்றில் வேலை பார்த்து வந்த நிலையில், தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டுமென்றும், இல்லாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்றும் கூறிவந்திருக்கிறார் சக்திவேல். மகனது வற்புறுத்தலினால் பல இடங்களில் சுப்புத்தாய் பெண் பார்த்தும் சரியாக அமையவில்லை. அதனால் குடித்துவிட்டு வந்து அடிக்கடி பிரச்சனை செய்திருக்கிறார் சக்திவேல்.
கடந்த 3 ஆம் தேதியும் திருமணம் குறித்துப் பேசிய சக்திவேல் அம்மாவை மிரட்டியதோடு, ‘டீ குடிக்கணும். கடைக்கு போயி சீனி வாங்கிட்டு வா..’ என்று வீட்டிலிருந்து அனுப்பியிருக்கிறார். சுப்புத்தாய் வீடு திரும்பியபோது கதவு பூட்டியிருந்தது. மின்விசிறி கொக்கியில் அம்மாவின் சேலையைக் கட்டி தூக்கில் தொங்கியிருக்கிறார் சக்திவேல். முதலில் சிவகாசியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச்சென்று சக்திவேலுக்கு 3 நாட்கள் சிகிச்சை அளித்துள்ளனர். பிறகு, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையில் இருந்த சக்திவேல் கடந்த 11 ஆம் தேதி இறந்து போனார். சுப்புத்தாய் அளித்த புகாரின் பேரில் தற்கொலை வழக்குப்பதிவு செய்திருக்கிறது சிவகாசி கிழக்கு காவல்நிலையம்.