கடந்த ஆண்டு வீசிய கஜா புயலின் தாக்கம் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டத்தில் எதையும் விட்டு வைக்கவில்லை. வீடுகள், கட்டிடங்கள், மரங்கள் என்று தொடங்கி மயானக் கொட்டகைகளையும் அடித்து உடைத்துக் கொண்டு போனது. ஆனால் ஒரு வருடம் கடந்தும் கூட எதையும் சீரமைக்கவில்லை.
இதேபோல தான் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பகுதியிலும் முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்தது. அப்படித்தான் கீரமங்கலம் கொடிக்கரம்பையில் உள்ள மயானக் கொட்டகை தரைமட்டமாகிக் கிடந்தது. அதனால் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக திறந்த வெளியிலேயே சடலங்கள் எரிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தான் நேற்று (15.12.2019) முன்தினம் கொடிக்கரம்பை கோயில் பூசாரி பன்னீர் மரணமடைந்துவிட்டார். அவரது சடலத்தையும் திறந்தவெளியில் விறகு கட்டைகளை அடுக்கி வைத்து எரியூட்டிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென மழை வர எரிந்து கொண்டிருந்த சடலத்தின் தீ அணையத் தொடங்கியது.
இதைப் பார்த்த உறவினர்கள் அந்தப் பகுதியில் கிடந்த ஒரு தகர சீட்டை எடுத்து எரிந்த சடலத்திற்கு குடைப் பிடித்துக் கொண்டு நின்றனர். இந்த படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில் உடனடியாக மயானக் கொட்டகை அமைத்துக் கொடுப்பதாக பேரூராட்சி நிர்வாகத்தினர் உறுதி அளித்துள்ளனர்.