Skip to main content

இளைஞர் திடீர் மரணம்; சாலையோர உணவு காரணமா? 

Published on 13/08/2022 | Edited on 13/08/2022

 

youth passed away near kallakurichi

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள உளுந்தாண்டார் கோவில் பகுதியில் வசித்துவந்தவர் பிரபு(34). இவர், உளுந்தூர்பேட்டை நகராட்சியில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்து வரும் தற்காலிக ஊழியர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, பிரபு தண்ணீர் விநியோகிக்கும் பணியில் இருந்த போது மாலை நேரத்தில் அவருக்கு பசி ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக விருத்தாசலம் சாலையில் உள்ள ஒரு சாலையோர சிற்றுண்டி கடைக்குச் சென்று இரண்டு போண்டா ஒரு டீ சாப்பிட்டுள்ளார்.

 

சாப்பிட்டு சில மணி நேரத்தில் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரது குடும்பத்தினர் பிரபுவை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவர் மரணத்திற்கு காரணம் தரமற்ற உணவை சாப்பிட்டதுதான் என அவரது உறவினர்கள் புகார் கூறினர்.  

 

இது குறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை காவல் நிலைய போலீசார் மற்றும் சுகாதாரத்தை அதிகாரிகள் உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆகியோர் சம்பந்தப்பட்ட ஓட்டல் பகுதிகளில், உரிய ஆய்வு நடத்தி தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் சாலையோர டிபன் கடைகளை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பின் கோரிக்கை வைத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழப்பு; உறவினர்கள் மறியல்  

Published on 18/12/2023 | Edited on 18/12/2023
Three students lost their lives in an accident near Chinnasalem

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ளது உலகியநல்லூர். கடந்த 14 ஆம் தேதி இரவு அந்த ஊர் வழியாகச் சென்ற விவசாய டிராக்டர் மோதிய விபத்தில் 15 வயது இந்துமணி 17 வயது பச்சையப்பன் 18 வயது மணிகண்டன் ஆகிய மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். இதுகுறித்து சின்ன சேலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பவத்தன்று இரவே டிராக்டர் ஓட்டுநர் அம்மாசி என்பவரைக் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் டிராக்டர் உரிமையாளரைக் கைது செய்யக்கோரி இறந்து போன மாணவர்களின் உறவினர்கள், விருகாவூர் மும்முனை சந்திப்பில் கள்ளக்குறிச்சி டூ விருத்தாசலம் நெடுஞ்சாலையில் நூற்றுக்கு மேற்பட்டோர் கொட்டும் மழையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டு வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. வாகன விபத்தில் பலியான மூன்று மாணவர்களின் உறவினர்களிடம் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள், பெயரளவிற்கு ஒருவரைக் கைது செய்துள்ளனர் என்று கூறினர். எனவே அதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இது குறித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அவர் உறுதியளித்ததின் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். சம்பவ இடத்தில் கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ரமேஷ், கள்ளக்குறிச்சி உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் போலீஸார் உடன் இருந்தனர். சுமார் 40 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story

சாமி சிலைகள் சேதம்; பொதுமக்கள் போராட்டம்       

Published on 16/10/2023 | Edited on 16/10/2023

 

swami idols were vandalised in Kallakurichi, public struggle

 

கள்ளக்குறிச்சி  மாவட்டம் சின்னசேலம் அருகே கோவில் சிலைகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மக்கள், கோவில் முன் அமர்ந்து போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் பூசப்பாடி கிராமத்தின் எல்லையில் கன்னிமார் கோயில் உள்ளது. இந்தக் கோவில் சாமிகளை சேலம் மாவட்டம் ஊனத்தூர் மற்றும் அப்பகுதியில் உள்ள பல கிராமத்தைச் சேர்ந்த ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். 

 

இந்த நிலையில் இரு வேறு சமூகத்தினருக்கு கோயிலில் வழிபாடு நடத்துவதில் பிரச்சனை ஏற்பட்டதால் கடந்த 10 வருடமாக பூசை நடத்தப்படவில்லை. இதனால் ஒரு தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவில் சம்பந்தமாக வழக்கு தொடர்ந்தனர் கடந்த வாரம் நீதிமன்ற உத்தரவுப்படி கோவிலில் பூஜை செய்து வழிபாடு நடத்தினார்கள். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் இணைந்து வழிபாடு நடத்திய மக்களுக்கு பாதுகாப்பு அளித்தனர். இந்நிலையில் எட்டாவது நாளான நேற்று ஊனத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற போது அதிர்ச்சி அடைந்தனர். 

 

swami idols were vandalised in Kallakurichi, public struggle

 

காரணம் மாற்று சமூகத்தைச் சார்ந்த ஒரு சிலர் கோவிலை சுற்றியுள்ள மரங்களை வெட்டியதாக கூறுகின்றனர். அப்போது கோவிலில் உள்ளே இருந்த சிலைகள் உடைந்தும் காணப்பட்டது. இதனால் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தவர்கள் கோவிலின் அருகே அமர்ந்து மரத்தை வெட்டி சிலைகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை கைது செய்ய வேண்டும் என கோஷமிட்டு கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அதன்பின்பு இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் கோவிலில் வழிபாடு நடத்தும் மக்களை செல்போனில் தொடர்பு கொண்டு‌ இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். 

 

இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இதற்கு ஒரு தீர்வு காணாமல் இந்த இடத்தை விட்டு போக மாட்டோம் என்று அமர்ந்திருந்தனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்புவதாக கூறியதையடுத்து கோவில் முன்பு பொதுமக்கள் காத்திருந்தனர். சின்னசேலம் போலீசார் கோவில் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சின்னசேலம் வட்டாட்சியர் கமலக்கண்ணன் பேச்சு வார்த்தை நடத்தினார். மரங்களை வெட்டி சிலைகளை சேதப்படுத்தியவர்களைக் கண்டறிந்து, காவல்துறை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி அளித்தார். கோவில் வளாகத்தில் கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ரமேஷ், சின்ன சேலம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராமன் கச்சிராயபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் சின்னசேலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திக் உள்ளிட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் சின்ன சேலம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது