Skip to main content

நேற்று காதலி... இன்று தம்பி மனைவி; அத்துமீறிய அண்ணனைக் கொலை செய்த இளைஞர்!  

Published on 26/07/2023 | Edited on 26/07/2023

 

younger brother incident his brother who misbehaved with his wife
விவேக் - வினோத்

 

சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ள கொம்மக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன்கள் வினோத்(26) மற்றும் விவேக்(25). இருவரும் கூலித்தொழிலாளிகள். வினோத்திற்குத் திருமணமாகி மனைவி, இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். விவேக்கின் மனைவி அபிநயா(23) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. அண்ணன், தம்பி இருவரின் வீடுகளும் அருகருகே உள்ளன. விவேக்கின் மனைவி அபிநயாவுக்கும், வினோத்திற்கும் படிக்கும் காலத்தில் இருந்தே பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்தப் பழக்கம்,  அவர்களுக்குள் ஆழமான காதலாக மாறியுள்ளது. ஆனால் எதிர்பாராத விதமாக குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, வினோத் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சினிமாவில் வருவதுபோல, அபிநயாவின் பெற்றோர் வினோத்தின் தம்பி விவேக்கைத் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியுள்ளனர். இதனால் அவரும் வேறு வழியின்றி, விவேக்கிற்குக் கழுத்தை நீட்டினார். 

 

திருமணத்திற்குப் பிறகுதான் தன் மனைவியான அபிநயாவும், அண்ணன் வினோத்தும் படிக்கும் காலத்தில் இருந்தே தீவிரமாகக் காதலித்து வந்துள்ள விபரமே விவேக்கிற்குத் தெரிய வந்தது. இதனால் கலக்கம் அடைந்த விவேக், கல்யாணத்திற்கு முன்பு எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும், இனிமேல் அண்ணனுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனத் தன் மனைவிக்கு அறிவுரை கூறியுள்ளார். ஆனால் பக்கத்து வீட்டிலேயே வசிப்பதால் வினோத், தன் தம்பி இல்லாத நேரங்களில் அபிநயாவை அடிக்கடி சந்திப்பதும், பேசுவதுமாக இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர்கள் ரகசியமாகச் சந்தித்து தனிமையில் இருந்துள்ளனர். இதை அறிந்த விவேக் அண்ணனைக் கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.    

 

இந்நிலையில், ஜூலை 19ம் தேதி அபிநயாவை புத்தூர் கிராமத்தில் உள்ள அவருடைய அம்மா வீட்டிற்கு விவேக் அழைத்துச் சென்று விட்டுவிட்டு வந்தார். வரும் வழியில் அண்ணன் வினோத்தைச் சந்தித்துள்ளார். அப்போது விவேக், தன் அண்ணனைப் பார்த்து, எங்கே போகிறாய்? எனக் கேட்டுள்ளார். அதற்கு அவரோ, ஏன்... உனக்குத் தெரியாதா? உன் பொண்டாட்டியைப் பார்க்கத்தான் போய்க்கிட்டு இருக்கிறேன் என நக்கலாகச் சொல்லி இருக்கிறார். இந்தப் பதிலைக் கேட்டு விவேக் ஆத்திரம் அடைந்தார். உடனே அவர் கீழே கிடந்த கல்லை எடுத்து, வினோத்தின் தலையில் போட்டு சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் அவர் மூச்சு பேச்சின்றி மயங்கி விழுந்தார். சாலையோரமாக அவரைக் கிடத்தி விட்டு, பின்னர் புத்தூர் கிராமத்திற்குச் சென்று அபிநயாவிடம் என்ன நடந்தது என்பது குறித்து விவேக் கூறியுள்ளார்.     

 

மேலும் அவர், இதைப் பற்றி யார் கேட்டாலும் வினோத்தைக் காட்டெருமை தாக்கியதில் காயம் அடைந்து விட்டதாகக் கூற வேண்டும் என்றும் மனைவியிடம் கூறியுள்ளார். இது ஒருபுறம் இருக்க, சாலையோரம் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வினோத்தை மீட்ட உள்ளூர்வாசிகள், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர். இந்தச் சம்பவம் குறித்து ஏற்காடு காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல்கட்ட விசாரணையில் விவேக், அபிநயா ஆகியோரிடம் விசாரித்தபோது இருவரும் முரண்பட்ட தகவலைச் சொன்னார்கள். இதில், விவேக்தான் தனது அண்ணன் வினோத்தைக் கல்லால் தாக்கியிருப்பது தெரிய வந்தது. 

 

இதையடுத்து காவல்துறையினர் ஜூலை 21 ஆம் தேதி, கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விவேக்கை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதற்கிடையே, சிகிச்சை பலனின்றி வினோத் ஜூலை 24 ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்துக் கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காகக்  காவல்துறையினர் மாற்றம் செய்து, விவேக்கைக் கைது செய்தனர். காவல்துறையினர் அவரைச் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, பின்னர் சேலம் மத்தியச் சிறையில் அடைத்தனர்.   

 

 

சார்ந்த செய்திகள்