Skip to main content

35 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளுடன் டிமிக்கி கொடுக்க முயன்ற இளம் பெண்; அதிமுக வட்ட செயலாளரை தேடும் போலீசார்!!

Published on 13/10/2018 | Edited on 13/10/2018

 

fake notes

 

சென்னை அமைந்தகரையில் 35 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய கள்ள நோட்டுகளுடன் பிடிபட்ட பெண் கொடுத்த தகவலின் அடிப்படையில் கொளத்தூர் அதிமுக வட்ட செயலாளரை போலீசார் தேடிவருகின்றனர்.

 

சென்னை சைதாப்பேட்டை மேற்கு ஜோன்ஸ் சாலை பகுதியை சேர்ந்தவர் வனிதா. அண்ணா நகரிலுள்ள ''ஹை ஸ்டைல்'' கடையில் கேஷியராக பணியாற்றி வருகிறார். இவர் அமைந்தகரையிலுள்ள சோனியா எனும் மருந்துக்கடையில் 300 ரூபாய்க்கு மருந்து வாங்கிவிட்டு 2000 ரூபாய் நோட்டை கொடுத்து மீதம் 1700 ரூபாயை பெற்றுக்கொண்டு விறுவிறுவென தனது வாகனத்தை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். அந்த இரண்டாயிரம் தாளை பார்த்த கடைக்காரர் அந்த தாள் கள்ள நோட்டு என அறிந்து வனிதாவை பின் தொடர்ந்து சென்றுள்ளார். ஆனால் வனிதாவோ மீண்டும் அதே பகுதியிலுள்ள வேறொரு மருந்து கடைக்கு சென்று  சில மருந்துகள் வாங்கிக்கொண்டு அங்கும் 2000 ரூபாய் கள்ள நோட்டை கொடுத்து மீதம் பணத்தை பெற முயற்சிக்க அங்கு வந்த கடைக்காரர் கையும் களவுமாக வனிதாவை பிடித்து அமைந்தகரை போலீசாரிடம் ஒப்படைத்தார். 

 

fake notes

 

வனிதாவிடம் இருந்து 35 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய 17 இரண்டாயிரம் ரூபாய்  கள்ள நோட்டுகளும், மூன்று, 500 ரூபாய் கள்ள நோட்டுகளையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் உடன் பணியாற்றும் ஒருவரால் பழக்கமான கொளத்தூர் தொகுதி அதிமுக வட்ட செயலாளரும், வழக்கறிஞருமான காமேஷ் என்பவர்தான் கள்ள நோட்டுக்களை தன்னிடம் தந்ததாக கூறியுள்ளார். இதனை அடுத்து அதிமுக வட்ட செயலாளர் காமேஷை போலீசார் தேடிவருகின்றனர். 

சார்ந்த செய்திகள்