திருப்பூர் மாவட்டம் பல்லடம் குங்கும பாளையத்தை சேர்ந்தவர் பிருந்தா (வயது 19). இவர் பல்லடம் அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரும் காதலித்து வந்தனர்.இந்த நிலையில் காதலர் இருவருக்கும் சில நாட்களுக்கு முன்பு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் பிருந்தாவிடம், அவருடைய காதலன் பேச மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த பிருந்தா தனது காதலனுடன் எப்படியாவது பேசிவிட வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அது முடியவில்லை.
இதுமட்டுமல்லால் காதலர் மற்றொரு பெண்ணுடன் பேசி வருவதை அறிந்த பிருந்தா விரக்தியடைந்து, இதனால் தான் என்னுடன் பேசுறது இல்லையா என்று காதலனிடம் கேட்டு விரக்தி அடைந்துள்ளார். பின்பு என்னை காதலிக்க மறுத்துவிட்டு வேறு பெண்ணை காதல் பண்றியா என்ன செய்கிறேன் பார் என்று வீட்டுக்கு விரக்தியாகவும், ஏமாற்றத்துடனும் வந்துள்ளார். அதன் பின்பு கடந்த 3-ந் தேதி இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்து கொண்டார். தீ மளமளவென உடல் முழுவதும் பற்றி எரிந்தது. வேதனை தாங்கமுடியாமல் பிருந்தா அலறி சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது பிருந்தாவின் உடல் முழுவதும் தீ கொழுந்து விட்டு எரிந்தது. அங்கிருந்தவர்கள் தீயை அணைத்தனர். உயிருக்கு போராடிய பிருந்தாவை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தபோது போலீசில் பிருந்தா மரண வாக்குமூலம் அளித்தார். அதில் நானும், குங்குமம் பாளையத்தை சேர்ந்த சந்தோசும் உயிருக்கு உயிராக காதலித்தோம். ஆனால் சிறிது நாட்களாக அவர் என்னிடம் பேசுவதை குறைத்துக்கொண்டார். அதன் பின்னர் என்னிடம் பேசுவதை நிறுத்தி விட்டார். காதலித்து ஏமாற்றியதால் விரக்தியடைந்த நான் தீக்குளித்தேன். இந்த நிலையில், மருத்துவமனையில் தீவீர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பிருந்தா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.