திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட கோலடி பகுதியில் ஏரி ஒன்று அமைந்துள்ளது. இது மிகப் பழமையான ஏரியாகும். இந்த பகுதியைச் சுற்றிலும் ஆக்கிரமிப்பு செய்து பல்வேறு கட்டிடங்கள், வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக பூந்தமல்லி வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இதற்கு அந்தப் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து பல நாட்களாக போராட்டம் நடந்து வரும் நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் நடவடிக்கைக்கு எதிராக அந்த பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர் தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இன்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர்.
இந்தநிலையில் உயிரிழந்த சங்கரின் உடலுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், ''இங்கு மட்டுமா மதுரையில் விமானநிலையம் கட்டுவதற்கு வீடுகளை அகற்றி வருகிறார்கள். தினமும் இதேதான் நடக்கிறது. நம் நிலத்திலிருந்து செம்மஞ்சேரி, கண்ணகி நகர், பெரும்பாக்கத்திற்கு வெளியேற்றியவர்கள் இந்த ஆட்சியாளர்கள் தான். இது ஒரு ஏரி என்று சொல்லி இடிக்க வரும் இவர்கள் தான் பரந்தூரில் 12 ஏரிகளை தூர்த்து விட்டு விமானநிலையம் கட்டத் துடிக்கிறார்கள்.
நீங்கள் வள்ளுவர் கோட்டம் பார்த்திருப்பீர்கள். அது ஏரியை தூர்த்துக் கட்டப்பட்டது. வள்ளுவர் கோட்டம் இருக்கும் பகுதிக்கு பேர் 'லேக் ஏரியா' அதை தூர்த்துவிட்டு கட்டிடம் கட்டி இருக்கிறார்கள். அதை இடியுங்கள் என வழக்கு போட்டால் நீதிமன்றம் அனுமதிக்குமா? ஏனென்றால் அங்கு வசதி படைத்தவர்கள், பணக்காரர்கள், அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் வாழ்கிறார்கள். இங்கு அடித்தட்டு மக்கள், உழைக்கும் மக்கள், தினம் வீட்டு வேலைக்கு செய்து வாழும் மக்கள் வாழ்கிறார்கள். நமக்கு அதிகாரம் இல்லை. குரல் எழுப்ப யாரும் இல்லை ஆனாலும் உங்களுடன் பிறந்தவன் நான் இருக்கிறேன் என்பதை மறந்து விடாதீர்கள். அதிகாரிகளுக்கு தெரியாமல் மக்கள் எப்படி குடியேறினார்கள். ராத்திரியோடு ராத்திரி இடிக்க வந்தாலும் நான் இங்கு வருவேன். நான் வர தாமதம் ஆனால் என் கட்சியினர் நிற்பார்கள். நோட்டீஸ் ஒட்டியது ஒட்டியதாகத்தான் இருக்கும். ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் தைரியமாக மட்டும் இருங்கள். அழுவது கதறுவது கண்ணீர் வடிப்பதை முதலில் நிறுத்துங்கள். அதனால் எதையும் சாதிக்க முடியாது. ஒருத்தர் உயிரை விட்டிருக்கிறார். அதனால் என்ன பயன்? அந்த குடும்பமும் நாமும் நடுத்தெருவில் அழுவதை தவிர எதுவும் சாதிக்க முடியாது. ஏனென்றால் உயிருக்கும் மதிப்பளிக்காத ஆட்சியாளர்கள் இவர்கள்'' என்றார்.