எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான பா. ஜெயப்பிரகாசம் வயது முதிர்ச்சி மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக விளாத்திகுளத்தில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பர துறையின் முன்னாள் இணை இயக்குனரும், சூரிய தீபன் என்ற புனைப் பெயரில் பல்வேறு கதைகள், கவிதைகள், நாவல்கள் மற்றும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல் குறித்தும் எழுதியுள்ளார். இந்நிலையில், எழுத்தாளர் பா. ஜெயப்பிரகாசம் வயது முதிர்ச்சி மற்றும் உடல் நல குறைவு காரணமாக விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள அவரது வீட்டில் நேற்று (23ம் தேதி) மாலை காலமானார்.
மறைந்த பா. ஜெயப்பிரகாசம் தன்னுடைய மாணவப் பருவத்தில் 1965ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றார். அதன் காரணமாக இந்திய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதாகி பாளையங்கோட்டை சிறையில் மூன்று மாதங்கள் சிறை வாசம் அனுபவித்துள்ளார்.
1968ஆம் ஆண்டு முதல் 1971ஆம் ஆண்டு வரை மதுரையில் கல்லூரி விரிவுரையாளராகவும், 1971ஆம் ஆண்டு முதல் 1999ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை இணை இயக்குனராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர் பா. ஜெயப்பிரகாசம். கல்லூரி நாட்களில் இருந்து இவர் சிறந்த பேச்சாளராக திகழ்ந்துள்ளார். பல இலக்கிய மேடைகளிலும் கருத்தரங்குகளிலும் அரசியல் அரங்குகளிலும் இவர் சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளார்.
கவிதை, கதை, கட்டுரை, உருவகக் கதைகள் என இவரது படைப்புகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. மன ஓசை என்ற கலை இலக்கிய மாத இதழின் பொறுப்பாசிரியராகவும், தமிழ் படைப்பாளிகள் முன்னணி என்ற அமைப்பின் செயலாளராகவும் இருந்துள்ளார்.
ஆய்வு மாணவர்கள் சிலர் இவரது படைப்புகளில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். அதில் பா.ஜெயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல் காட்டு மக்களின் வாழ்வியல் என்ற ஆய்வும், பா. ஜெயப்பிரகாசம் கதைகளில் மண்ணும் மக்களும் என்கிற மற்றொரு ஆய்வும் குறிப்பிடத்தக்கது.
மறைந்த எழுத்தாளர் பா. ஜெயப்பிரகாசம், தனது மறைவுக்குப் பிறகு எவ்வித சடங்கு சம்பிரதாயங்களும் மேற்கொள்ளாமல் தன்னுடைய உடலை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆய்வுக்காக ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். அதன்படி நாளை (25ம் தேதி) நண்பகல் 12 மணியளவில் விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள அவரது வீட்டில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டு, அதன் பின்பு அவரது உடல் மருத்துவக் கல்லூரி வசம் ஒப்படைக்கப்பட இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.