கரோனா தொற்று காரணமாக இலங்கையில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அங்கே அதன் விலைகள் உஷ்ணம் போல் ஏறியுள்ளன. இதன் காரணமாகவே அங்கே அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு உணவுப் பதுக்கல் காரர்கள் வேட்டையாடப்பட்டு வருகின்றனர். இந்தத் தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி தூத்துக்குடியிலிருந்து விரலி மஞ்சள், கருப்பு மிளகு, உணவுப் பொருள்கள் மற்றும் போதைப் பொருள்கள் உள்ளிட்டவை இலங்கைக்குக் கடத்தப்பட்டு வந்தாலும் தற்போது அவைகளில் சில மட்டுமே சிக்குகின்றன.
இதனிடையே சந்தடி சாக்கில் விலை மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் கடத்தவிருந்ததும் தடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது தான் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் கன்டெய்னரில் வைக்கப்பட்டு சுங்கத்துறை அனுமதி பெற்றும் அவைகள் சுங்கத்துறை அதிகாரிகளால் பார்வையிட்டு அவைகளில் அவர்கள் சீல் வைத்த பிறகே இந்தக் கன்டெய்னர்கள் ஏற்றுமதிக்காகத் துறைமுகத்திற்கு லாரிகள் மூலம் அனுப்பப்படுவது வழக்கம். முன்னதாகவே இந்தக் கன்டெய்னர்கள் அனைத்தும் சுங்கத்துறை அங்கீகாரம் பெற்ற கன்டெய்னர் முனையங்களில்தான் வைக்கப்பட்டிருக்கும். இந்தச் சூழலில் சிப்காட் பகுதியிலிருந்து செயல்படும் ஒரு கன்டெய்னர் முனையத்திலிருந்து கடத்தல் பொருள்கள் அனுப்பப்படுகின்றன என்று தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வு யூனிட் அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது.
அதையடுத்து சிப்காட்டுக்குச் சென்ற அதிகாரிகள் முனையத்தில் சோதனை நடத்தியுள்ளனர். அதுசமயம் அங்கு வைக்கப்பட்டிருந்த இரண்டு கன்டெய்னரை சோதனையிட்ட போது அதில் ஒன்றில் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டது தெரிய வந்திருக்கிறது. அதையடுத்து செம்மரக்கட்டைகளையும் அதனை ஏற்றி வந்த லாரியையும் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களின் விசாரணையில் செம்மரக்கட்டைகளைப் பதுக்கியது தொடர்பாக ஜார்ஜ் என்பவரைக் கைது செய்தனர். விசாரணைக்குப் பின்பு அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இதுகுறித்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளோ, கடத்தப்படவிருந்த செம்மரக் கட்டைகள் 5.69 மெட்ரிக் டன் எடையுள்ள விலைமதிப்பான கட்டைகள்.
இதன் மதிப்பு சுமார் 2.30 கோடிக்கும் மேலாகும். இந்தச் செம்மரக் கட்டைகள் ஆந்திராவிலிருந்து, தூத்துக்குடிக்குக் கடத்திவரப்பட்டு பின் இங்கிருந்து வேறு பொருட்கள் என்ற அடையாளத்துடன் துபாய் துறைமுகமான ஜபல் அலிக்குக் கடத்தப்படவிருந்தது தெரியவந்தது. இந்தக் கடத்தலில் சுங்கத் துறையினருக்கும் தொடர்பிருக்கிறதா என்பது பற்றியும் விசாரணை நடந்து வருகிறது என்கிறார்கள். விலைமதிப்புள்ள செம்மரக் கட்டைகளுக்கு வெளிநாடுகளில் ஏகக் கிராக்கியாம். மருத்துவம், விலை மதிப்புள்ள இருக்கைகள் மற்றும் பல்வேறு இசைக் கருவிகளும் தயார் செய்வதற்கு இவை ஏற்றதாகும் என்கிறார்கள் உபரித் தகவல்களாக.