தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. தற்போது பல இடங்களில் வெள்ள நீர் வடியத் துவங்கியுள்ளது. முன்னதாக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ரயிலில் சிக்கியிருந்த 1000க்கும் மேற்பட்ட பயணிகள் கடந்த மூன்று நாட்களாக உணவு, குடிநீர் இன்றி அவதி அடைந்தனர். இதனையடுத்து ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் முன்னெச்சரிக்கை கருதி நிறுத்தி வைத்த ரயிலில் இருந்து 300 பேர் மீட்கப்பட்டு பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.
அதே சமயம் ரயிலில் மீதமுள்ள 530 பயணிகளை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது. தொடர்ந்து 3 நாட்கள் ரயிலில் சிக்கியிருந்த ரயில் பயணிகள் நேற்று மாலை மீட்கப்பட்டனர். 6 பேருந்துகள் மூலம் 400க்கும் மேற்பட்ட பயணிகள் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அதற்கு முன்னதாக சூலூரில் இருந்து வந்த இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டரின் உதவியுடன் கர்ப்பிணி பெண், 3 குழந்தைகள் என மொத்தம் நான்கு பேர் மட்டும் பத்திரமாக மீட்கப்பட்டு மதுரை அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். அதில் மீட்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணி பெண் அனுசுயா மயில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.