விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே உள்ளது டி.குன்னத்தூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த 18 வயது நர்மதா. அவரது தந்தை குமரவேல் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரது தாயார் ஜோதி மற்றும் அவரது தம்பி அஜய் ஆகியோருடன் ஏனாதிமங்கலத்திலுள்ள நர்மதா தனது பாட்டி வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நர்மதா, திண்டிவனம் அருகில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தார். அப்போது, ஏனாதிமங்கலம் பகுதியைச் சேர்ந்த திருமால் என்பவரது மகன் நித்தியானந்தன்(24) என்பவரை நர்மதா காதலித்து வந்துள்ளார். நர்மதா, நித்தியானந்தன் இருவரும் பல்வேறு இடங்களில் தனிமையில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வந்தனர். காதலின் எல்லை மீறிப் போனதால்தான் நர்மதா கருத்தரித்துள்ளார்.
இந்த விஷயங்கள் அனைத்தும் நர்மதாவின் உறவினர்களுக்குத் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் நித்யானந்தன் வீட்டிற்குச் சென்று நர்மதாவை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளனர். ஆனால் நித்தியானந்தன், நர்மதாவை திருமணம் செய்துகொள்ள முடியாது என்று மறுத்துள்ளார். தன்னை காதலித்து கர்ப்பமாக்கி விட்டு, திருமணம் செய்து கொள்ள முடியாது என நித்தியானந்தன் மறுத்ததைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நர்மதா, தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை எண்ணி மனவேதனை அடைந்தார்.
இதனால் மனம் வெறுத்துப் போன நர்மதா, நேற்றுமுன்தினம் மாலை வீட்டில் புடவையால் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இவர் தூக்கில் தொங்கும் போது அவர் போட்ட அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டுசென்று சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நர்மதா உயிரிழந்தார். அதையடுத்து திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் நர்மதாவின் தாய் ஜோதி, அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.