திருப்பத்தூர் மாவட்டத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கொடுக்கப்பட்ட மாத்திரையில் இரும்புக் கம்பி இருந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நாட்டறம்பள்ளி அருகே காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமிக்கு வழங்கப்பட்ட மாத்திரையில் இரும்புக் கம்பி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மாத்திரையை உடைத்து சிறுமி உட்கொள்ள இருந்ததால் கம்பி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெற்றோரும் உறவினர்களும் வெலக்கல்நத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தினை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறையின் இணை இயக்குநர் செந்தில்குமார் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் மாத்திரையை தயாரித்த நிறுவனத்திடம் விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உத்தரவாதம் அளித்த பின் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.