பலமுறை கண்டித்தும் கேளாமல் தனது மனைவியுடன் தனிமையில் இருந்த வாலிபரை கத்தியால் குத்திக்கொன்ற காய்வகறி வியாபாரிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது வேலூர் மாவட்ட நீதிமன்றம்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா தாழையாத்தம் பச்சையம்மன் கோவில் தெருவை சேர்ந்த காய்கறி வியாபாரி ஜெயபால் (வயது 36). இவர் மனைவி ரேணுகா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சதீசுக்கும் (வயது 35) இடையே கள்ள உறவு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி ஒன்றாக இருந்ததைக்கண்ட ஜெயபால், ரேணுகாவை கண்டித்து சதீசை கைவிடும்படி கூறியுள்ளார். அப்போதைக்கு சரி என்று சொல்லிவிட்டு, மீண்டும் சதீஷுடன் உறவு வைத்து வந்துள்ளார் ரேணுகா.
சம்பவம் நடைபெற்ற கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் 9-ந் தேதி ரேணுகாவும் சதீஷும் ஒன்றாக இருந்துள்ளனர். அப்போது வீட்டிற்கு வந்த ஜெயபால் இதனைக் கண்டு ஆத்திரமடைந்து வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சதீசை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் சதீஷ் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
குடியாத்தம் டவுன் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து ஜெயபாலை கைது செய்தனர். வேலூர் மத்திய சிறையில் ஜெயபால் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரணையை அடுத்து மாவட்ட நீதிபதி ஆனந்தி, சதீசை கத்தியால் குத்திக் கொலை செய்த ஜெயபாலுக்கு 5 ஆண்டு சிறைதண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். இதையடுத்து ஜெயபால் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.