கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ளது நிதி நத்தம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சுந்தரவேல். இவர் சிங்கப்பூரில் இருந்து தனது மனைவி குழந்தையைப் பார்ப்பதற்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 25ஆம் தேதி சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தார். இவர் வருவதற்கு முன்பே சிங்கப்பூரில் கரோனா முன் பரிசோதனை செய்து நோய்த் தொற்று இல்லை என்ற சான்றிதழுடன் சென்னை வந்தடைந்தார்.
பின்பு 15 நாள் தனிமைப்படுத்தி ஊருக்கு அனுப்புவதாகக் கூறி சுகாதாரத்துறையினர் சென்னை தேனாம்பேட்டை ஹயாத் ஹோட்டலில் தனி அறையில் அடைத்து வைத்துள்ளனர். இரண்டு, மூன்று நாட்கள் தனியறையில் இருந்த அவர் உயிரிழந்துள்ளார். அவர் எப்படி இருக்கிறார் என்பதை ஓட்டல் ஊழியர்களும் சுகாதாரத்துறையினர் சென்று பார்க்கவில்லை. மூன்று நாட்களுக்குப் பிறகு அவர் அறையில் இறந்து கிடந்ததாக அவர் மனைவி சந்திராவிற்கு தகவல் மட்டும் அனுப்பியுள்ளனர். அவரது மனைவி சந்திரா தனது கணவர் இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன என தெரிவித்துள்ளார். அவர் அறையில் அத்துமீறி நுழைந்து அவர் கொண்டு வந்த பெட்டியை உடைத்து சோதனை நடத்தியுள்ளனர். அதில் இருந்த பொருட்கள் காணாமல் போயிருந்தன.
இதுகுறித்து உரிய விசாரணை வேண்டும், "அவரை இழந்து நானும் எனது இரண்டு வயது ஆண் குழந்தையும் தவித்துவருகிறோம். எனவே எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்." என்று அப்போதுமுதல் இப்போதுவரை அவர் இறந்த ஹயாத் ஹோட்டல் எல்லைக்குட்பட்ட தேனாம்பேட்டை காவல் நிலையம் முதல் மாநகரக் கமிஷனர், மாவட்ட ஆட்சியர் இப்படி பல்வேறு அதிகாரிகளுக்கும் புகார் மனு அளித்துள்ளார். அதோடு பல்வேறு அலுவலர்களிடம் நேரிலும் சென்று முறையிட்டுள்ளார். இதுவரை அவரது கணவர் இறந்ததற்கான பிரேதப் பரிசோதனை அறிக்கை உட்பட எந்தவிதமான ஆவணங்களும் அவருக்கு கிடைக்கவில்லை. கடந்த 28ஆம் தேதி அவரது கணவர் இறந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
கடந்த ஆண்டு சுந்தரவேல் மனைவி சந்திராவிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தற்போதைய தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிக்கை வெளியிட்டார். திமுக இளைஞரணி தலைவரும் எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் சந்திராவிடம் தொலைபேசியில் பேசி ஆறுதல் கூறினார். தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இப்போதாவது தனக்கு நீதி கிடைக்குமா என்று அழுதுகொண்டிருக்கிறார் சுந்தரவேல் மனைவி சந்திரா. சுந்தரவேல் மரணம் குறித்து கடந்த ஆண்டு ஜூலை 15 - 17 நக்கீரன் இதழில் அட்டைப்படக் கட்டுரையாக செய்து வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.