
திருநங்கைகளுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்துள்ள உப்பரபள்ளி கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் இந்த பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் இலவச பட்டா வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என கூறப்படுகிறது.
'தங்கள் பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு 100 க்கும் மேற்பட்டோர் கோரிக்கை பதிவு செய்துள்ள நிலையில் இதில் வெளியூரை சேர்ந்த இரண்டு திருநங்கைகளுக்கு இந்த பகுதியில் பட்டா வழங்குவதற்கு வருவாய் துறையினர் அனுமதி அளித்துள்ளனர். எங்கள் பகுதியில் திருநங்கைகளுக்கு பட்டா வழங்கக் கூடாது' எனக் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.