Skip to main content

“மணிப்பூர் விவகாரம் குறித்து அதிமுக வாய் திறக்காதது ஏன்?” - அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி

Published on 22/07/2023 | Edited on 22/07/2023

 

Why is the AIADMK silent on the Manipur issue Minister thangam thennarasu question 

 

மணிப்பூர் விவகாரம் குறித்து அதிமுக வாய் திறக்காதது ஏன் என நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

 

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10.30 மணியளவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூடியது. இந்தக் கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா, துறை செயலாளர்கள்  உள்ளிட்ட பல்வேறு அரசு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படன.

 

அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து தெரிவிக்கையில், “தமிழகத்தில் சுமார் 30 லட்சம் பேர் சமூக நலப் பாதுகாப்புத் திட்டங்கள் மூலமாக பயனடைகின்றனர். கைம்பெண் உதவித்தொகை, ஆதரவற்ற முதியோருக்கான மாத உதவித்தொகை, ஆயிரம் ரூபாயில் இருந்து 1200 ரூபாயாக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயில் இருந்து  ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்படும். இதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 30 லட்சம் பயனாளிகள் பயன்பெறுவார்கள்.

 

உதவித் தொகைகளுக்கு விண்ணப்பித்துக் காத்திருக்கக் கூடியவர்களுக்கும் விரைவில் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கைம்பெண், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உயர்த்தப்பட்டதன் மூலம் அரசுக்கு 845 கோடி ரூபாய் கூடுதலாகச் செலவாகும். வரும் 24 ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்திற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இந்தச் சிறப்பு முகாம்கள் 3 கட்டங்களாக நடைபெற உள்ளன. இந்தத் திட்டத்தில் தகுதி வாய்ந்த அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.

 

Why is the AIADMK silent on the Manipur issue Minister thangam thennarasu question
கோப்பு படம்

மேலும் மணிப்பூர் வன்முறை சம்பவங்கள் குறித்துப் பேசுகையில், “மணிப்பூரில் மிகப்பெரிய சம்பவம் நடைபெற்றுள்ளது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியே இதனைக் கண்டித்திருக்கிறார். நாட்டில் பெண்கள் மீது அக்கறையுள்ள ஒவ்வொரு கட்சியும், அரசியல் தலைவர்களும் இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து இருக்கும்போது, தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக இதுவரை இது குறித்து வாய் திறக்காது மௌனமாக இருப்பது ஏன்? எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி யாருக்கும் அடிமையாக இருக்கவில்லை என்று சொல்லுகிறார். ஆனால் மணிப்பூர் விவகாரம் குறித்து அவரிடம் இருந்து ஒரு வார்த்தை கூட வராததைப் பார்க்கும்போது அதிமுகவின் இரட்டை வேடம் அம்பலப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

வாக்குப்பதிவு முடிந்ததும் தொடங்கிய வன்முறை; மணிப்பூரில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலி!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Incident at CRPF soldiers in Manipur

கடந்த 2023 ஆம் ஆண்டு மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடிக்க, மாநிலமே கலவர பூமியாக மாறியது. வன்முறைக்கு இடையில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி, இந்திய நாட்டையே உலுக்கியது. இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு ஆகியும், இன்றுவரை மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை.  

இந்த நிலையில், மணிப்பூர் மாநிலத்துக்கு மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. நாடு முழுவதும் 2வது கட்டத் தேர்தல் நேற்று அமைதியாக நடந்து முடிந்தது. இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் குக்கி இனக்குழு நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் நரண்சேனா பகுதியில் பாதுகாப்பு படையினர் (சி.ஆர்.பி.எப்) வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, குக்கி இனக்குழு நள்ளிரவு 12 மணிக்கு மேல் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில், 2 பாதுகாப்பு படை வீரர்கள் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மேலும் 2 பாதுகாப்பு படை வீரர்களை, அங்கிருந்த மற்ற வீரர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு முடிந்த சில மணி நேரத்திலேயே நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.