Skip to main content

பங்காளி மனைவியிடம் பாலியல் அத்துமீறல்; விவசாயி அடித்து கொலை! மின்சாரம் பாய்ந்து இறந்ததாக நாடகமாடிய மூவர் கைது!!

Published on 26/12/2019 | Edited on 26/12/2019

கெங்கவல்லி அருகே, பங்காளி மனைவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட விவசாயியை அடித்துக்கொன்ற உறவினர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர். மேலும், கொலையுண்ட நபர், மின்சாரம் பாய்ந்து இறந்ததாக நாடகமாடியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள ஆணையம்பட்டி 6- வது வார்டு அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ராமர் (41). விவசாயி. இவருடைய மனைவி சாந்தி. இவர்களுக்கு விஷ்ணு (15), விக்னேஷ் (11) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். 


கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு, கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த சாந்தி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ராமருக்குச் சொந்தமாக, மணக்காடு பகுதியில் 2 ஏக்கர் விவசாயம் நிலம் உள்ளது. கடந்த இரு நாட்களுக்கு முன்பு, வழக்கம்போல் ராமர் தனது விவசாய நிலத்திற்குச் சென்றார். ஆனால் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. 


ராமரின் தம்பி மனைவி மஞ்சுளா, மூத்த மகன் விஷ்ணு ஆகியோர் ராமரை பல இடங்களில் தேடி பார்த்துள்ளனர். அப்போது தோட்டத்து கிணற்று அருகில் ரத்த வெள்ளத்தில் ராமர் சடலமாகக் கிடந்தார். சடலத்தின் மீது மின்கம்பிகள் சுற்றப்பட்டு இருந்தது. 

salem incident attur police investigation


இதுகுறித்து அவர்கள் கெங்கவல்லி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். மர்ம நபர்கள் அவரை கொலை செய்துவிட்டு, மின்சாரம் தாக்கி இறந்ததுபோல் ஜோடித்திருப்பது தெரிய வந்தது. 


இதுகுறித்து நாம் காவல்துறை தரப்பில் பேசினோம்.  


ராமரின் பக்கத்து தோட்டத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி (38). இவர், ராமரின் சித்தப்பா மகன். கலியமூர்த்தியின் மனைவி கனகா (34). இவர்கள் தோட்டத்திலேயே வீடு கட்டி வசித்து வருகின்றனர். ராமர், கனகாவிடம் அடிக்கடி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து கனகா தன் கணவரிடம் புகார் அளித்துள்ளார். 


இதையறிந்த கலியமூர்த்தி, ராமரை பலமுறை எச்சரித்துள்ளார். நாக்குறிச்சியைச் சேர்ந்த உறவினர் ஒருவரை வைத்து பஞ்சாயத்தும் பேசியுள்ளார். கனகாவிடம் அத்துமீறலில் ஈடுபட மாட்டேன் என்று ஒரு கோயிலில் வைத்து கற்பூரம் அனைத்து சத்தியமும் பெற்றுள்ளனர். இனிமேல் கனகாவின் வாழ்வில் ராமர் தலையிட மாட்டார்; பிரச்னை எல்லாம் ஓய்ந்தது என்று இருந்தனர். ஆனால், இரு நாள்களுக்கு முன்பு மது போதையில் இருந்த ராமர், மீண்டும் கனகாவிடம் பாலியல் ரீதியில் அணுகியுள்ளதோடு, தகராறிலும் ஈடுபட்டுள்ளார். 


இதுகுறித்து கனகா, கடம்பூரில் வசித்து வரும் தன் தந்தை ராமருக்கு (60) (அவர் பெயரும் ராமர்தான்) தகவல் அளித்து, உடனடியாக ஊருக்குப் புறப்பட்டு வருமாறு அழைத்துள்ளார். இதையடுத்து கனகாவின் தந்தை, கலியமூர்த்தி, கனகா ஆகியோர் சேர்ந்து ராமரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே ராமர் உயிரிழந்துள்ளார். 
 

salem incident attur police investigation


பின்னர், கொலையை மறைக்க திட்டமிட்ட அவர்கள், கொலையுண்ட ராமரின் உடலின் மீது மின்சார கம்பிகளைச் சுற்றி, அவர் மின்சாரம் தாக்கியதில் இறந்துவிட்டதாக சித்தரித்துள்ளனர். சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூறு ஆய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கலியமூர்த்தி, அவருடைய மனைவி கனகா, கனகாவின் தந்தை ராமர் ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.


 

சார்ந்த செய்திகள்