Skip to main content

“ஆசிரியை வீடியோ எங்கே?” -அனலடிக்கும் விருதுநகர் வில்லங்கம்!

Published on 11/10/2019 | Edited on 11/10/2019

‘மது விருந்தில் பெண்களோடு பெரும் தலைகள்! விருதுநகரைக் கலக்கும் வீடியோ!’ என்னும் தலைப்பில் கடந்த அக்டோபர் 02-04 நக்கீரன் இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதனை அப்படியே நகல் எடுத்த  விருதுநகரைச் சேர்ந்த அசோகன் என்பவர் அதன் ஓரத்தில்  ‘இவனுங்கதான் ஊரில் பெண்கள் படிக்கும் கல்வி நிறுவனங்கள் அனைத்துக்கும் நிர்வாகிகள். ஊர் உருப்படுமா?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்த நகல்கள் விருதுநகரில் பரவலாக வினியோகிக்கப்பட்டன. அதனால்,  மது விருந்தில் கலந்துகொண்ட பெரும் தலைகள் கொதிநிலைக்குச் சென்றுவிட்டனர்.

 

 "Where is the teacher video?"

 

கடந்த 6-ஆம் தேதி அதிகாலை 3-30 மணிக்கு மணிகண்டன் என்பவரின் வீட்டுக்கதவைத் தட்டினார் விருதுநகர் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சம்பத்குமார். அவரோடு சார்பு ஆய்வாளர், காவலர்கள் என மொத்தம் 6 பேர் சேர்ந்துகொண்டனர்.  “ஒரு வழக்கு சம்பந்தமாக விசாரிக்க வேண்டும்..” என்று கூறி  மணிகண்டனை  ஜீப்பில் ஏற்றினர். அடுத்து, அதே பகுதியில் குடியிருக்கும் நாராயணமூர்த்தியையும் ஆகாஷ் டிவி பிரேம்குமாரையும் அள்ளிக்கொண்டு அந்த ஜீப் அதிகாலை 4-15 மணிக்கு விருதுநகர் கிழக்கு காவல் நிலையம் சென்றது.  

 

 "Where is the teacher video?"

 

“உங்களில் யார் நக்கீரனுக்கு செய்தி கொடுத்தது? மெட்ரிகுலேசன் பள்ளி செயலாளரும் ஆசிரியையும் இணைந்திருக்கும் வீடியோவை அடுத்து வெளியிடப் போகின்றீர்களாமே? அந்த வீடியோ உங்களில் யாரிடம் இருக்கிறது?” என்று இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் மூவரிடமும் விசாரிக்க..  புகார் அளித்ததாகச் சொல்லப்படும் தொழிலதிபர் முரளியும், ராமமூர்த்தியும் அங்கு வந்தார்கள்.  தான்  கொண்டுவந்த பிவிசி பைப்பை ராமமூர்த்தி சம்பத்குமாரிடம் தர, புகார் அளித்தவர்களின் கண்ணெதிரே மூவரையும் அடி பின்னியெடுத்தார்.  அடித்த அடியில் மணிகண்டனின் இடது கை வீங்கித் தொங்கியது. அவர்கள் அடி வாங்கி அலறிய காட்சியைக் கண்டு களித்துவிட்டுக் கிளம்பினார்கள் முரளியும் ராமமூர்த்தியும். அவர்கள் சென்றதும் இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் மணிகண்டனிடம் “நீ போகலாம். உன் மீது வெறும் 75 கேஸ்தான் போட்டிருக்கிறோம்.” எனச் சொல்லி, காலை 6-50 மணிக்கெல்லாம் அனுப்பிவிட்டார். நாராயணமூர்த்தியையும் பிரேம்குமாரையும் வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் விட்டுவிட்டார்.

 

 "Where is the teacher video?"

 

இடது கையில் மாவுக்கட்டு போட்டிருந்த மணிகண்டன் நம்மிடம் “முரளியும் ராமமூர்த்தியும் நள்ளிரவில்  விருதுநகர் மாவட்ட எஸ்.பி. ராஜராஜனை வீட்டில்  சந்தித்திருக்கிறார்கள்.  ‘விருதுநகர் கல்வி நிறுவனங்களில் முக்கிய பொறுப்புக்களில் இருந்துகொண்டு தகாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் நிர்வாகிகள் குறித்த தகவலை நக்கீரன் போன்ற  மீடியாக்களிடம் சொல்கிறார்கள். வாட்ஸ்-ஆப், பேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களிலும் பரப்புகிறார்கள். இந்த மூவராலும் எங்கள் மானம் போகிறது. வெளியே தலைகாட்ட முடியவில்லை. அடுத்த வீடியோ ஒன்று ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறதாம். இவர்களை ஏதாவது செய்தே ஆகவேண்டும்.’ என்று இருவரும்  ‘தனிப்பட்ட முறையில்’ கேட்டுக்கொள்ள, நள்ளிரவு கடந்தும் விருதுநகர் கிழக்கு காவல் நிலையம் பரபரப்பானது. இன்ஸ்பெக்டர் தொடங்கி காவலர்கள் வரையிலும் சுறுசுறுப்பானார்கள். ஏனென்றால், எங்களை அடித்துத் துவைக்கும் சேவைக்காக, அந்தப்  பெரும் பணக்காரர் பெரிய தொகை ஒன்றைக் காவல்துறையினரிடம் கொடுத்திருக்கிறார்.

 

 "Where is the teacher video?"


பணத்தைக் கொடுப்பவர் கைகாட்டும் ஆட்களை அடிப்பதும் கொலை செய்வதும் கூலிப்படை செய்யும் வேலைதானே? அதைத்தான் விருதுநகரில் காவல்துறையினர் செய்திருக்கிறார்கள். அதிகாலை 3-30 மணிக்கு வீட்டுக்கு வந்து என்னை இழுத்துச்சென்ற சிசிடிவி ஃபுட்டேஜ் இருக்கிறது. விருதுநகர் கிழக்கு காவல் நிலையம் பதிவு செய்த வழக்கு என்ன தெரியுமா? அன்றைய தினம் காலை 6 மணிக்கு வாடியான் கேட் அருகில் போவோர் வருவோரை ஆபாசமாக நான் திட்டினேனாம். போக்குவரத்துக்கு இடையூறு செய்தேனாம். காவல்துறை என் மீது பொய் வழக்கு போட்டதற்கு வலுவான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. அதனை மாநில மனித உரிமைகள் ஆணையத்துக்கு அனுப்பி புகார் செய்திருக்கிறேன்.” என்று பெருமூச்சுவிட்டவர் “இரவு நேரத்தில் தன் மகன் நாராயணமூர்த்தியை போலீஸ் இழுத்துச்சென்றதைப் பார்த்த அவருடைய அப்பா சுந்தர்ராஜன் அந்த சோகத்தில் அன்றே இறந்துபோனார்.  ஒரு ஆத்திரத்தில்தான் விருதுநகரில்  சேஷாத்ரி என்பவரைக் கொலை செய்தார்கள். அதுபோல்,  என் உயிரைப் பறிக்கவும் இவர்கள் தயங்க மாட்டார்கள்.” என்றார் அச்சத்துடன்.

 

 "Where is the teacher video?"

 

நாம் விருதுநகர் கிழக்கு காவல்நிலைய ஆய்வாளர் சம்பத்குமாரை தொடர்புகொண்டு, பிவிசி பைப்பால் அடித்தது குறித்தும், பொய் வழக்கு பற்றியும் கேட்டோம். ”அதுவந்து.. அதுவந்து..” என்று பேசுவதற்கு ரொம்பவே தயங்கிய அவர், “பெட்டிஷனை விசாரிச்சோம். யாரையும் அடிக்கல. அவங்க எல்லாரும் ஒரே ஜாதி. வழக்கு வேணாம்னு சொன்னாங்க. அதனால, சாதாரண பிரிவில் செவன்டி ஃபைவ் கேஸ் போட்டு மணிகண்டனை அனுப்பினோம்.” என்றார்.  

 

 "Where is the teacher video?"

 

தொழிலதிபர் முரளி நம்மிடம் “ஒரு மேரேஜ் பார்ட்டியாத்தான் அந்த மது விருந்து நடந்துச்சு. அது ஒரு பழைய வீடியோ. ஆர்கெஸ்ட்ராவுல பெண்கள் பாடினார்கள். அவ்வளவுதான்.  ஆறு மாசத்துக்கு முன்னாலயே இது பெரிய  பிரச்சனை ஆச்சு. போலீஸ் ஸ்டேஷன்ல இதே பிரேம்குமாரும் நாராயணமூர்த்தியும் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தாங்க.  இது ஒருவகையான பிளாக் மெயில். இவங்க வேலையே இதுதான். செக்ரட்டரி - டீச்சர் வீடியோ ரிலீஸ் பண்ணப்போறோம்னு மணிகண்டன் எனக்கு மெசேஜ் அனுப்பினார். இவங்க விவகாரத்தை சட்டபூர்வமா பண்ணனும்னுதான் போலீஸ்கிட்ட போனோம். சென்சிடிவான விஷயம்கிறதால விடியுறதுக்கு முன்னால விசாரிச்சிட்டா நல்லதுன்னு  நெனச்சோம். மற்றபடி போலீசுக்கு யாரும் பணம் கொடுக்கல.
 

nn

 

இவங்க ஏன் மாறி மாறி இதே வேலையா இருக்கிறாங்க தெரியுமா? விருதுநகர் நாடார் சமுதாயத்துக்கென்று முன்னோர்கள் பல இடங்களில் சொத்து வாங்கிப் போட்டிருக்காங்க. கோவில் சொத்து.. ஸ்கூல், காலேஜ்ன்னு நெறய இருக்கு. சுயநலத்தோடு கோடிக்கணக்கான கோவில் சொத்தை சிலர் அவங்க பேர்ல பதிவு பண்ணிட்டாங்க. ஸ்கூல் பொறுப்புல இருந்துக்கிட்டு கோடி கோடியா சுரண்டிட்டாங்க. கோர்ட்ல கேஸ் ஒருபக்கம் நடந்துக்கிட்டிருக்கு. பணத்தைத் திருப்பித் தந்திடறோம்னு மொதல்ல காம்ப்ரமைஸுக்கு வந்தாங்க. அப்புறம், யாரோ தூண்டிவிட்டு மனசு மாறிட்டாங்க. தட்டிக் கேட்கிறவங்கள ஏதாவது பண்ணி அசிங்கப்படுத்தணும்கிறதுதான் இவங்களோட நோக்கம்.  இந்த ஊரு மீதான அக்கறையில் நெறய நல்லது பண்ணுனாரு எங்க அண்ணன் மதிப்பிரகாசம். அவரு இறந்து ரெண்டு வருஷமாச்சு. அப்பவும் இவங்க விடல. இரண்டாமாண்டு நினைவு அஞ்சலிங்கிற பேர்ல, அவரை தாதான்னும் கோர்ட்டையும் போலீஸையும் விலை பேசியவர்ன்னும் நோட்டீஸ் அடிச்சி அசிங்கப்படுத்தினாங்க.  பிசினஸ்ல ரொம்ப பிசியா இருந்தும்,  ஊர் நன்மைக்காக பொது வாழ்க்கைக்கு வர்றோம். எனக்கும் அவங்களுக்கும் சொந்தப் பகை எதுவுமில்ல. முன்னோர்களின் உழைப்பையும் தியாகத்தையும்  மறந்து சுயநலவாதிகள் அபகரித்த  பொதுச்சொத்துக்களை மீட்க வேண்டுமென்ற நல்ல நோக்கத்தோடுதான் நாங்க செயல்படறோம்.” என்று நீண்ட விளக்கம் தந்தார்.  

 

 "Where is the teacher video?"

 

மணிகண்டனோ “கோவில் சொத்தை அபகரித்தவர்களிடமிருந்து மீட்க நினைப்பதெல்லாம் சரிதான். அதற்குத்தான் சட்டமும் நீதிமன்றமும் இருக்கிறதே?  கல்வி நிறுவனங்களில் பொறுப்புக்களில் இருப்பவர்கள் அருவருப்பான செயல்களில் ஈடுபடுவது குற்றமா? அதனை அம்பலப்படுத்துவன் மூலம்,  தரமும் தகுதியும் இல்லாதவர்களை வெளியேற்றி,   அங்கு  பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கச் செய்வது குற்றமா?  அந்தரங்க வீடியோவை யார் வெளியிட்டார்களோ அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே? காவல்துறையினரை ஏவி அடித்து மிரட்டி உயிர் பயத்தை ஏற்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்?” என்று வலியுடன் கேட்டார்.  

அவரவர்  ‘நியாயம்’ அவரவர்க்கு என்றாலும், யாரும் பொது நீதியிலிருந்து விலகுவதை உலகம் ஏற்றுக்கொள்ளாது! 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.