தமிழக டிஜிபி சைலேந்திரபாபு விரைவில் ஓய்வுபெற இருக்கும் நிலையில் அவர் முதன் முதலாக காவல் அதிகாரியாகப் பணியைத் தொடங்கிய ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்திற்கு வருகை புரிந்து பார்வையிட்டார்.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''கோபிசெட்டிபாளையம் காவல் நிலையம் தான் என்னுடைய முதல் காவல் நிலையம். 1989 ஆவது ஆண்டு இந்த காவல் நிலையத்தில்தான் நான் முதல் பணியை ஆரம்பித்தேன். கோபிசெட்டிபாளையம் என்பது இன்றைக்கு இருக்கக்கூடிய கோபிசெட்டிபாளையம் உட்கோட்டம், சத்தியமங்கலம் உட்கோட்டத்தை அடக்கிய பகுதி. அப்பொழுது வீரப்பன் இங்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருந்த நேரம். சந்தன மரத்தை கடத்தி விற்பது; யானைகளை வேட்டையாடுவது; பல வன அதிகாரிகளை கொலை செய்தது இதுபோன்று நடந்தபோது தான் நான் இங்கு வந்திருந்தேன்.
வீரப்பனுடன் நான்கு முறை துப்பாக்கி சண்டை நடத்தி இருக்கிறேன். பலரை பிடித்திருக்கிறோம். அப்பொழுது மிகப்பெரிய சவாலாக இருந்த உட்கோட்டம் இப்பொழுது ரொம்ப அமைதியாக இருக்கிறது. காவல் நிலையத்தில் வழக்குகளை உடனுக்குடன் பதிவு செய்திருக்கிறார்கள். காவல் நிலையத்தில் எல்லா பதிவேடுகளையும் நான் பார்வையிட்டேன். சாதாரணமான வழக்குகள் கூட மொபைல் ஃபோன் திருட்டு போனால் கூட அதை பதிவு செய்து விசாரணை செய்து கண்டுபிடித்து இருக்கிறார்கள். இருசக்கர வாகனங்கள் காணாமல் போனால் கூட வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து சிலவற்றை பிடித்துள்ளார்கள். சிலவற்றை பிடிக்க முடியவில்லை.
காவல் நிலையத்துக்கு வருபவர்களை வரவேற்பதற்காக தமிழக முதல்வர் ஒரு திட்டத்தை கொண்டு வந்தார். காவல் நிலைய வரவேற்பு அதிகாரி. அவர்கள் யார் என்றால் காவல்துறையில் பணியாற்றும் போது உயிர் நீத்த காவலர்களுடைய குழந்தைகளுக்கு கருணை அடிப்படையில் இந்த பணியை கொடுத்துள்ளோம். அவர்கள் எல்லாருமே பட்டதாரிகள், இன்ஜினியரிங் படித்தவர்களாக இருக்கிறார்கள். எனவே காவல் நிலையத்திற்கு வருபவர்களை பரிவோடு பேசி உங்களுடைய நிலைமை என்ன; பிரச்சனை என்ன; உங்களுடைய புகார் என்ன; நீங்கள் யாரை சந்திக்க வேண்டும் எனக் கேட்டு, ஒருவேளை இன்ஸ்பெக்டர் இல்லாமல் இருந்தால் கூட உடனடியாக இன்ஸ்பெக்டரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு உடனடியாக சொல்லி, உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து பிறகு உங்களுடைய பிரச்சனை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்று கேட்கும் அளவிற்கு வரவேற்பாளர்களை வைத்திருக்கிறோம். மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது'' என்றார்.