கரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கக் கோரி, தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் செவிலியர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு செவிலியர்களுக்கு இணையான ஊதியம், கரோனா காலத்தில் அரசு அறிவித்தபடி ஒரு மாத சிறப்பு ஊதியம் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் செவிலியர்கள் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றும் போராட்டத்தை வெள்ளிக்கிழமை (ஜன. 29) முதல் தொடங்கியுள்ளனர்.
சேலத்தில், அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு, ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதுகுறித்து, செவிலியர்கள் சங்க மாநில துணைத் தலைவர் சுதா, “மத்திய அரசு செவிலியர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழக அரசின் கீழ் பணியாற்றும் செவிலியர்களுக்கும் வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் கேட்கிறோம்.
கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் செவிலியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும், முறையாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என நீண்ட காலமாக கேட்டு வருகிறோம். இதுவரை எங்கள் கோரிக்கை மீது அரசு செவி சாய்க்கவில்லை.
கரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு ஒருமாத சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என அரசுதான் அறிவித்தது. ஆனால், இன்னும் அத்தொகை எங்களுக்கு வழங்கப்படவில்லை. கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த செவிலியர்களுக்கு 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றனர். கரோனாவால் உயிரிழந்த செவிலியர்களுக்கு இதுவரை அத்தொகையும் வழங்கப்படவில்லை.
எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தை தொடங்கி உள்ளோம். அதேநேரம், மக்கள் நலன் கருதி எங்கள் பணிக்கு இடையூறு ஏற்படாத வகையில் இந்தப் போராட்டம் தொடரும்'' என்றார்.