வேலூர் மாவட்டம், ஆற்காடு அடுத்த மாம்பாக்கம் அருகே வாழைப்பந்தல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் கடந்த கல்வியாண்டில் படித்த மாணவ-மாணவிகளுக்கு அரசால் வழங்க கூடிய இலவச மடிக்கணினியை வழங்கவில்லையாம். படித்து முடித்த அவர்கள் தற்போது கல்லூரியில் சேர்ந்துள்ளனர். தங்களுக்கு தர வேண்டிய மடிக்கணினியை ஏன் வழங்கவில்லை எனக்கேட்டு மாணவ-மாணவிகள் பள்ளியில் கேட்டபோது அங்கு யாரும் சரியாக பதில் சொல்லவில்லையாம்.
தங்களுக்கு தர வேண்டிய இலவச மடிக்கணினியை உடனே வழங்க வேண்டுமேன கோரி ஜூலை 10 ந்தேதி மதியம் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர். இந்த போராட்டத்தை ஆதரித்து அப்பகுதியை சேர்ந்த இந்திய புரட்சிகர மாணவர் சங்கம் மற்றும் மாக்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியினர் இணைந்து கொண்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதுப்பற்றிய தகவலை அறிந்த காவல் துறையினர் போராட்டம் ஆரம்பிக்கும் முன்பே, அங்கு வந்த காவல்துறையினர், போராட்டம் நடத்த வந்த மாணவர்களை போராடச் சொல்லிவிட்டு, அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்துக்கொள்ள வருகை தந்திருந்த இந்திய புரட்சிகர மாணவர் சங்கம் மற்றும் சிபிஎம் கட்சியை சேர்ந்தவர்களை கைது செய்து தூக்கி சென்று வேனில் ஏற்றி காவல்நிலையம் சென்றனர்.
பின்னர் மாணவர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போரட்டம் நடத்தினர். அப்போது அப்பள்ளி தலைமை ஆசிரியர் மாணவர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் மாணவர்கள் பள்ளியிலிருந்து வெளியேறி வாழைப்பந்தல் கூட்டுரோட்டில் மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த தகவலை அறிந்து வந்த இராணிப்பேட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கீதா, மாணவர்களிடத்தில் விரைவில் அரசாங்கம் மடிக்கணினி தரும் என வாக்குறுதி தந்தார். இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் மாணவர்கள் சலைமறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.