கரோனா அச்சுறுத்தல் காரணமாக கைதிகளை விடுதலை செய்யும்போது, எந்த வகை கைதிகளை விடுதலை செய்யலாம் என முடிவு செய்ய, உயர்மட்டக் குழு அமைக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசு உள்துறை செயலாளருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவுவதை அடுத்து, சிறைக் கைதிகளுக்கு இடைக்கால ஜாமீன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும், புதுச்சேரியிலும், விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகள், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் என பலவகை கைதிகள் உள்ளனர். இந்த கைதிகளின் ஜாமீன் மனுக்கள் நிலுவையில் உள்ளன.
இவர்களில் எந்தவகை கைதிகளுக்கு ஜாமீன் வழங்கலாம் என முடிவெடுக்க, உயர்மட்டக் குழு அமைக்க உத்தரவிடக் கோரி, செய்யாறைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வு, வீடியோ கால் மூலம் விசாரித்தது. அப்போது, எந்த வகை கைதிகளுக்கு ஜாமீன் வழங்கலாம் என முடிவெடுக்க, மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு, உள்துறை செயலாளர், டி.ஜி.பி., அடங்கிய குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
அப்போது, நீதிபதி வினீத் கோத்தாரி, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஏற்கனவே குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழுவின் தலைவராக தான் பதவி வகிப்பதாகவும் குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், இந்தக் குழு கடந்த மார்ச் 26-ம் தேதி கூடி ஆலோசித்ததாக குறிப்பிட்டார்.
இதையடுத்து, மனுவுக்கு ஏப்ரல் 8-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், ஜாமீன் மனுக்கள் மீது விரைந்து விளக்கம் அளிக்கும்படி சம்பந்தப்பட்ட காவல் துறையினருக்கு அறிவுறுத்தும்படி அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர்.