மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நேற்று (08 பிப்.) நாகர்கோவில் வந்தார். அப்போது அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில்,
''டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்துக்கும் அந்த விவசாயிகளுக்கும் சம்மந்தமே கிடையாது. பாஜக, ஆர்.எஸ்.எஸ்சின் ஆதரவாளர்கள்தான் போராடும் அந்த விவசாயிகளுக்கு அவப்பெயர் உண்டாக்க திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்தினார்கள்.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டம் முழுக்க முழுக்க அதானி, அம்பானி போன்ற கார்ப்ரேட்டுகளுக்கு இந்தியாவின் விவசாயத்தை ஒப்படைக்கும் சட்டமாக இருக்கிறது. இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற்றால் கார்ப்ரேட்டுகளின் நலன் பாதிக்கபடும் என்பதால் மோடி அந்தச் சட்டத்தை அமல்படுத்த தீவிரமாக உள்ளார். ஏற்கனவே உச்சநீதிமன்றம் நீண்டகாலமாக சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய வேண்டும், அதை மாநில அரசே முடிவு எடுத்து கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பலாம் என தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் தமிழக அரசு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னே அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தி தீர்மானம் நிறைவேற்றி கவர்னர் ஒப்புதலுக்கு கொடுத்துள்ள நிலையில், கவர்னர் இரண்டு ஆண்டு காலம் கிடப்பில் போட்டுவிட்டு, இப்போது 7 பேர் விடுதலையில் எனக்கு அதிகாரம் இல்லை குடியரசு தலைவருக்குத்தான் உள்ளது என்கிறார்.
கவர்னருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது, என்ன அதிகாரம் இல்லை என கடந்த 2 ஆண்டுகளாக தொியவில்லையா? இது அதிமுக - பாஜக அரசு மற்றும் கவர்னர் என சோ்ந்து ஃபுட்பால் மைதானத்தில் பந்தை மாறி, மாறி உதைப்பது போல் மாறி, மாறி அடித்துக் கொண்டிருக்கிறார்கள். 12 ஆயிரம் கோடி பயிர்க் கடனைத் தள்ளுப்படி செய்து விட்டோம் என முதல்வா் கூறி வருகிறார். இதில் என்ன கூத்தென்றால் 12 ஆயிரம் கோடி பயிர்க் கடன் தள்ளுப்படி என அறிவித்துவிட்டு, இப்போதுதான் கூட்டுறவு வங்கியில் எவ்வளவு கடன் உள்ளது என கணக்கெடுக்கிறார். ஒரு முதல்வர் கடன் பாக்கி எவ்வளவு இருக்கிறது என தொியாமலே கடன் தள்ளுப்படி செய்வது என்ன நியாயம்?
தமிழகம் முழுவதும் தொடக்கப்பள்ளி, உயா்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் பல்லாயிரகணக்கான ஆசிாியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்தப் பணியிடங்களை கூட நிரப்ப இந்த அரசு தயாராக இல்லை. புள்ளி விபரப்படி 4 லட்சத்து 15 ஆயிரம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன. தோ்தல் நெருங்கி வரும் நிலையில் உயர்கல்வித்துறையில் அவசரமாக கவுரவ விாிவுரையாளர் பணியமர்த்த போகிறோம் என அறிவித்துள்ளனர். ஒரு கவுரவ விாிவுரையாளர் பணிக்கு 30 லட்சம் லஞ்சம் பேரம் நடக்கிறது. ரேஷன் கடைகளுக்கு 7 லட்சம் கேட்கிறார்கள். உள்ளாட்சி அமைப்புகளில் தோ்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகத்துக்கு எந்த அதிகாரமும் வழங்காமல், உள்ளாட்சி அதிகாரம் முழுவதும் கையில் வைத்துக்கொண்டு அமைச்சர் வியாபாரம் செய்து வருகிறார்.
வரும் தோ்தலில் அதிமுக - பாஜக கூட்டணியை முறியடிக்க திமுக உள்ளிட்ட மதசார்பற்ற கட்சிகளுடன் கம்யூனிஸ்ட்டுகள் சேர்ந்து வெற்றி பெற செய்வதற்கான பணிகளைச் செய்வது, மேலும் மா. கம்யூனிஸ்ட் அதன் பலத்துக்கேற்றார் போல் சில இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெறுவது, அதையொட்டி கம்யூனிஸ்ட் சார்பில் 20- ம் தேதி முதல் தமிழகம் முமுவதும் அகில இந்தியா தலைவர்கள் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்கள். 22-ம் தேதி நாகர்கோவிலில் மா.கம்யூனிஸ்ட் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா காரத் கலந்துகொள்கிறார்'' என்றார்.