'ஆதிச்சநல்லூர்' - வரலாற்று அறிஞர்களுக்கு மட்டுமல்ல, வரலாற்றை அறிந்துகொள்ள விரும்புவர்களுக்கும் பிடித்த இடம். கீழடி பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்ததென்றால், அதற்கு முந்தைய - சிந்து சமவெளி நாகரிகத்தை விட பழமையானது என சில ஆய்வாளர்களால் கருதப்படுகிற ஆதிச்சநல்லூர், எந்த அளவிற்கு உண்மைகளைத் தன்னகத்தே கொண்டிருக்கும்?. அந்த உண்மைகள் வரலாற்றை மாற்றலாம், புதிய கோணத்தை தரலாம். எனவேதான் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறையால் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளை தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.
ஆதிச்சநல்லூரில் கடந்த 2004 ஆம் ஆண்டு அகழாய்வு தொடங்கப்பட்டது. அந்த அகழாய்வு பணிகள் முடிவடைந்து 17 ஆண்டுகள் ஆகிய பின்னரும், அதன் ஆய்வு முடிவுகள் வெளியிடப்படாமல் இருந்து வந்தது. ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கையை வெளியிட வேண்டுமென வரலாற்று ஆர்வலர்களும், தமிழ் உணர்வாளர்களும் தொடர்ந்து குரலெழுப்பி வந்தனர்.
இந்தநிலையில் ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கை இந்த மாதத்தில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல், இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள சில தகவல்களும் தற்போது வெளிவந்துள்ளன. ஆதிச்சநல்லூரில் மக்கள் வாழ்விட பகுதிகள் இல்லை என இதுவரை கூறப்பட்டு வந்த நிலையில், முதன்முதலாக இக்கருத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் உள்ளன.
ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளவை: ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் இரும்பு காலத்திலேயே அரிசி மற்றும் தினை வகைகளை விளைவித்துள்ளனர். மேலும் இறந்தவர்களைப் புதைக்கும்போது தாழியில் அரிசி மற்றும் பச்சை பயிர் உள்ளிட்டவற்றை வைத்து புதைக்கும் சடங்கை மேற்கொண்டிருக்கின்றனர். அந்த அரிசியை ரேடியோ கார்பன் டேட்டிங் செய்தபோது அது கிமு. 850 காலத்தைச் சேர்ந்ததாக இருந்துள்ளது. (கிட்டத்தட்ட 2800 ஆண்டுகளுக்கு முந்தையது). ஆதிச்சநல்லூர் மக்கள் சக்கர தொழில்நுட்பத்தில் கைதேர்ந்தவர்களாக இருந்துள்ளனர். அங்கு அடுக்குகள் கொண்ட பானை சூளைகள், மணி தொழிற்சாலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அது அங்கு வாழ்ந்த மக்கள் நிலையான வாழ்வை மேற்கொண்டிருந்ததை தெரிவிக்கிறது. அப்பகுதி மக்கள் முத்துகுளித்தலிலும் ஈடுபட்டுள்ளனர்.
ஆதிச்சநல்லூரில் கருப்பு, சிவப்பு வண்ணம் பூசப்பட்ட கிண்ணங்கள், குவளைகள் கண்டுபிடிக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தின் டி.கல்லப்பட்டியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியின்போது கண்டுபிடிக்கப்பட்ட வெள்ளைப் புள்ளிகள் கொண்ட ஓவியங்களைப் போலவே, ஆதிச்சநல்லூரிலும் வெள்ளைப்புள்ளி ஓவியங்கள் கொண்ட கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆதிச்சநல்லூரில் மக்கள் வாழ்விடப் பகுதிகளுக்கும், இடுகாட்டுக்கும் உள்ள தொடர்பை உறுதி செய்யமுடியவில்லை. கலைப்பொருட்களைக் கவனமாக சேகரித்து, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆய்வு செய்தால் அதன் காலம் கிமு 1500 (3000 ஆண்டுகளுக்கு பின்னால்) வரை செல்லும்.
ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி முடிவுகள், விரைவில் வெளியிடப்பட வேண்டுமென்பதும், அங்கு தொடர்ந்து அகழ்வாய்வு நடைபெற வேண்டும் என்பதே தமிழக வரலாற்று ஆய்வாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.