சேலம் மாநகர பகுதிகளில் ஏப்ரல் 4ம் தேதி முதல் அனைத்து வகை இறைச்சிக் கடைகளுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், கருப்பூர் அரபிக்கல்லூரி அருகே புதிதாக இறைச்சி சந்தை உருவாக்கும் பணிகளும் நடந்து வருகிறது.
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மாநகரில் உள்ள இறைச்சிக்கடைகளில் கூட்டம் கூடுவதாகவும், இதனால் நோய்த்தொற்று அபாயம் இருப்பதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தன.

கடந்த ஞாயிறன்று பல கறிக்கடைகளில் சமூக விலகல் விதிகள் பின்பற்றப்படாமல், கூட்டம் முண்டியடித்தன. கூட்டத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதாக சேலத்தில் 20 கசாப்புக்கடைகளை மூடி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இதையடுத்து, சேலம் மாநகர பகுதிகளில் ஆடு, கோழி, மீன் உள்ளிட்ட அனைத்து வகை இறைச்சிக் கடைகளுக்கும் ஏப்ரல் 4ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை தடை விதித்து, மாநகராட்சி ஆணையர் சதீஸ் உத்தரவிட்டுள்ளார்.
அதேநேரம், மாநகராட்சியின் எல்லையான கருப்பூர் அரபிக் கல்லூரி அருகே, இறைச்சிக் கடைகளுக்கென பிரத்தியேக இடம் ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அப்பகுதியில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி விற்பனை செய்து கொள்வதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.
புதிதாக ஏற்படுத்தப்பட உள்ள இறைச்சி சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்கள், அருகில் உள்ள தகவல் தொழில்நுட்பப் பூங்கா வளாகத்தில் வாகனங்களை நிறுத்த இட வசதி செய்யப்பட்டுள்ளது. கடைகளின் முன்பு இரண்டு வாடிக்கையாளர் இடையே 2 மீட்டர் தூரம் சமூக இடைவெளி ஏற்படுத்தி இருக்க வேண்டும் என்றும், முக கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
வரும் 4ம் தேதி முதல் சேலம் மாநகர பகுதிக்குள் தடை உத்தரவை மீறி இறைச்சிக்கடைகள் செயல்படுகிறதா என்பதைக் கண்காணிக்கவும் 10 சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தடை உத்தரவை மீறும் மற்றும் சமூக விலகலை பின்பற்றாத கடைக்காரர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஸ் எச்சரித்துள்ளார்.