ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து காவல்துறையினர் தற்போது நூதன முறைகளில் வி-ழிப்புணர்வு பரப்புரை செய்யத் தொடங்கி விட்டனர். சாலை விபத்துகளினால் உயிரிழப்போரில் மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்து, தமிழகம்தான் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. பெரும்பாலான சாலை விபத்துகளின்போது தலையில் அடிபடுவதாலேயே மரணம் சம்பவக்கிறது என்கின்றன ஆய்வு முடிவுகள்.
நடந்து செல்வோரைக் காட்டிலும், மோட்டார் சைக்கிளில் செல்வோரே அதிகளவில் விபத்துகளில் சிக்குகின்றனர். ஆக, சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிர்சேதத்தைக் கட்டுப்படுத்த ஹெல்மெட் எனும் தலைக்கவசம் அணிவது கட்டாயமாகிறது. என்னதான் உயர்நீதிமன்றமும், காவல்துறையும் தலையில் குட்டி குட்டிச் சொன்னாலும், சாலையை தரமாக போட்டார்களா? என அரசை குறை சொல்வதும், தீர்ப்பு அளித்த நீதிபதி காரில் செல்லும்போது முதலில் சீட் பெல்ட் போடட்டும்...அப்புறம் நாங்கள் ஹெல்மெட் அணிகிறோம் என்று சாக்குப் போக்குச் சொல்லி நீக்குப்போக்காக தப்பிக்கும் வாகன ஓட்டிகளும் உள்ளனர்.
அதையும் மீறி வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி ஹெல்மெட் அணியாமல் சென்றதற்கு வழக்குப்பதிவு செய்தால், சமூக வலைத்தளங்களில் அவர்களையே குற்றவாளியாக்கி பதிவிடும் போக்கும் அதிகரித்து வருகிறது. சேலம் மாநகர காவல்துறையினர், ஹெல்மெட்டின் அவசியம் குறித்து வேறு ஒரு நூதன வழிமுறையைப் பின்பற்றுகின்றனர்.
மாநகரில் இரண்டு முக்கிய சாலைகளில் செல்ல வேண்டுமெனில் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வந்தால்தான் செல்ல முடியும். இல்லாவிட்டால், அந்த வாகன ஓட்டிகள் வந்த வழியிலேயே திருப்பி விடப்படுவர். இந்த திட்டத்திற்கு பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, நாமக்கல் மாவட்டத்தில் காவல்துறையினர், ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுவோருக்கு சுவையான சாக்லெட்டுகள் வழங்கி உற்சாகப்படுத்தும் நூதன வழிமுறையைப் பின்பற்றுகின்றனர். நாமக்கல்லிலும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவோர் மீது வழக்குப்பதிவு செய்வதில் காவல்துறையினர் தீவிரமாக இருந்தாலும், ஆட்சியர் அலுவலகம், நீதிமன்றம் உள்ளிட்ட அலுவலகங்களில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் ஹெல்மெட் போடாமல் அலட்சியமாக வாகனம் ஓட்டுவது அதிகரித்துள்ளது. இதுகுறித்தும் பொதுவெளியில் வாகன ஓட்டிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்நிலையில்தான், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், திங்கள்கிழமை (பிப். 3) முதல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ஆட்சியர் மெகராஜ் உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக அவர் அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கையும் அனுப்பி இருந்தார். இதையடுத்து, திங்கள் கிழமை காலையில், ஆட்சியர் அலுவலக முதன்மை நுழைவு வாயில் அருகே மாவட்ட காவல்துறை எஸ்பி அருளரசு, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வெங்கடேசன், இளமுருகன் மற்றும் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது ஹெல்மெட் அணியாமல் வந்த அரசு ஊழியர்கள், பொதுமக்களை உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்து தடுத்து நிறுத்தினர். அவர்களை ஹெல்மெட் அணிந்து வரும்படி வற்புறுத்தினர். அதையடுத்து ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளை பாராட்டி, அவர்களுக்கு காவல்துறை எஸ்பி சுவையான சாக்லெட்டுகளை வழங்கினார்.
வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டறிக்கையையும் விநியோகம் செய்தனர். இந்த சிறப்பு வாகனத் தணிக்கை 45 நிமிடங்கள் நடந்தது. சாக்லெட் வழங்கி ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையின் நூதன உத்திக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.