கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வல்லக்குளம் திருமலைரெட்டிபட்டி, வேப்பங்குடி, ஆகிய பகுதிகளில் தொகுப்பு குளிர்விப்பு நிலையம் துவக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு தொகுப்பு குளிர்விப்பு நிலையத்தை துவக்கி வைத்தார். பின்னர் அவர் அந்தந்த பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது, “பால் உற்பத்தியைப் பெருக்க புதிய அணுகுமுறைகளை கடைப்பிடித்து வருகிறோம். அது என்ன அணுகுமுறை என்றால், விவசாயிகளை மையப்படுத்திய அமைப்பாக இதனை செயல்படுத்தி வருகிறோம். பால் உற்பத்தியாளர்கள் எங்களுக்கு சதையும் ரத்தமும் போல உள்ளனர். பால் உற்பத்தியாளர்களுக்காக இரண்டரை லட்சம் கறவை மாடுகள் வாங்கி அதிக அளவில் பால் உற்பத்தியைப் பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து பின்வரும் காலங்களில் அதிக அளவு பாலின் தேவை இருக்கும். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எனது வேண்டுகோளாக வைப்பது, கரூர் மாவட்ட பகுதிகளில் பால் உற்பத்தியாளர் மையம் இல்லாத கிராமங்களில் பால் உற்பத்தியாளர் மையத்தை உருவாக்க நீங்கள் செயல்பட வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் குளித்தலை மாணிக்கம், கிருஷ்ணராயபுரம் சிவகாமசுந்தரி, அரவக்குறிச்சி இளங்கோவன் மற்றும் ஆவின் அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் என பலர் கலந்து கொண்டனர்.