“விருதுநகர் மாவட்டத்தில் அதிமுகவோடு திமுக சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்து உள்ளாட்சி தேர்தலைச் சந்திக்கிறது. அங்கங்கே இரு கட்சிகளின் ஒன்றிய செயலாளர்களும் பேரம் நடத்தி வருகின்றனர். தலைமைக்கு தெரியாமல் தங்களின் கட்சிக்கு துரோகம் செய்கின்றனர். இந்தக் குற்றச்சாட்டுக்கு இந்த போட்டோ ஆதாரமே போதும்.” என்று சில போட்டோக்களை நம்மிடம் காட்டி புகார் வாசித்தார் அந்த அதிமுக பிரமுகர்.
“ராஜபாளையம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான தங்கபாண்டியனுடன் ராஜபாளையம் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் குருசாமி, நீண்ட நேரம் பெர்சனலாக பேரம் பேசிய காட்சிதான் இது!” என, அந்தப் புகைப்படங்களின் பின்னணியை, அவரது அறிவுக்கு எட்டியவரையில் ஆராய்ந்து சொன்ன அவர், “அம்மா இருந்திருந்தால் இதுபோன்று நடக்குமா? சொந்தக்காரராகவே இருந்தாலும் திமுகவினர் வீட்டு திருமணம் என்றால் அதிமுகவினர் போக மாட்டார்கள். அதிமுகவினர் யாரெல்லாம் திமுகவினரோடு தொடர்பில் இருக்கிறார்கள் என்பதை போட்டோ ஆதாரத்தோடு புகாராக அனுப்பிவைத்தால் உடனே கட்சியிலிருந்து கட்டம் கட்டிவிடுவார்கள். அதனால், திமுகவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில்கூட அதிமுகவினர் தலைகாட்ட மாட்டார்கள். அந்த அளவுக்கு கட்டுப்பாடு காத்துவந்த கட்சியில், தற்போது நிலைமை தலைகீழாகிவிட்டது. காரணம், கட்சித் தலைமை மீதான பயம் அறவே போய்விட்டது பொது இடங்களில் வெளிப்படையாகவே திமுகவினரிடம் நட்பு பாராட்டுகிறார்கள். அம்மா ஆசியுடன் என்று சொல்வதெல்லாம் ஏமாற்றுவேலை. கட்சியை எப்படி நடத்த வேண்டுமென்று அம்மா ஏற்கனவே வழிகாட்டி விட்டார். அவர் வழியில் பயணிப்பதற்கு அதிமுக நிர்வாகிகள் பலருக்கும் விருப்பம் இல்லை. அதனால்தான், இதுபோன்ற பேரங்கள் வெளிப்படையாகவே நடக்கின்றன.” என்று சொல்லிக்கொண்டே போனார்.
‘பேரமா நடந்தது?’ என, ராஜபாளையம் திமுக எம்.எல்.ஏ. தங்கபாண்டியனிடமே கேட்டோம்.
“அட, கொடுமையே! இப்படியெல்லாமா கிளப்பி விடுகிறார்கள்? ராஜபாளையம் யூனியன் அலுவலகத்தில் வேட்புமனு பரிசீலனை செய்யும்போது ஒன்றிய செயலாளர் என்ற முறையில் நானும் அவரும் அங்கிருந்தோம். திமுககாரங்க மனு எதையும் நிராகரித்துவிடக்கூடாது என்று நானும் அதிமுககாரங்க மனுவை நிராகரித்துவிடக்கூடாது என்று அவரும் அங்கே போராடிக்கொண்டிருந்தோம். சட்ட மன்றத்தில் முதலமைச்சர் எங்கள் எதிரில் வந்தால், அவரோடு நாங்கள் தொடர்பு வைத்திருக்கிறோம் என்று சொல்வதா? இல்லையென்றால், முதலமைச்சர் திமுக எம்.எல்.ஏ.க்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார் என்று சொல்லிவிடுவதா? அந்த இடத்தில் எங்களைச் சுற்றி எல்லா கட்சிக்காரர்களும்தான் நிற்கிறார்கள். எந்தச் சூழ்நிலையிலும் திமுகவோட கொள்கையை நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம். திமுக வேட்பாளர் வெற்றிபெற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்போம். யூனியன் அலுவலகத்தில் நாங்கள் பேசிக்கொண்டிருந்ததை யாரோ போட்டோ எடுத்திருக்கிறார்கள். அதற்கெல்லாம், நான் இத்தனை விளக்கம் தரவேண்டியிருக்கிறது.” என்று அலுத்துக்கொண்டார்.
பனை மரத்துக்குக் கீழே நின்று பாலைக் குடித்தாலும் கள் என்றே உலகம் சொல்லும்! குடித்தது பாலா? கள்ளா? அவரவர் மனசாட்சிக்கே வெளிச்சம்!