
கோடை காலம் நெருங்கி வருவதால் தர்பூசணி பழங்களின் விற்பனை தொடங்கி வருகிறது. கோடைகாலம் என்றாலே பல இடங்களில் தற்காலிக தர்பூசணி கடைகள் முளைக்கும். இந்நிலையில் செயற்கையாக ஊசி செலுத்தி சாயமேற்றப்படும் பழங்கள் குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் மதுரை மாநகர் பி.பி.குளம் பகுதியில் உழவர் சந்தையின் அருகே ஊசிகள் மூலம் சாயமேற்றப்பட்ட தர்பூசணி பழங்கள் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் போனது. அதனடிப்படையில் அங்கு வந்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் தர்பூசணி பழங்கள் ஊசி மூலம் சாயமேற்றப்பட்டு விற்பனை செய்யப்பட்டது உறுதியானது. தொடர்ந்து சுமார் 1200 கிலோ தர்பூசணி பழங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், மாநகராட்சி வாகனத்தின் மூலம் எடுத்துச் சென்று அழித்தனர்.
ஊசி மூலம் சாயமேற்றப்பட்ட தர்பூசணி பழங்களை விற்ற கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதோடு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மதுரை மாநகர் முழுவதும் தர்பூசணி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.