கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ளது கோமுகி அணை. இந்த அணையின் மூலம் சுமார் 12 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் அதனை நம்பியுள்ள 40 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் சாய கூலித்தொழிலாளர்கள் பயன் பெறுகிறார்கள். இந்த அணையின் முழு கொள்ளளவு நாற்பத்தி ஆறு அடி, தற்போது 44 அடி வரை தண்ணீர் நிரம்பியுள்ளது.
அதனைத்தொடர்ந்து அணையிலிருந்து சம்பா பருவத்தில் விவசாயிகள் நெல் பயிரிடுவதற்கு ஏற்ற வகையில் கடந்த 2ஆம் தேதி அணையிலிருந்து பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், அமைச்சர் எ.வ. வேலு, மற்றும் எம்.எல்.ஏ-க்கள் சங்கராபுரம் உதயசூரியன், ரிஷிவந்தியம் வசந்தன், கார்த்திகேயன், உளுந்தூர்பேட்டை மணிகண்டன் மற்றும் பொறியாளர் பாஸ்கரன், சின்னசேலம் வட்டாட்சியர் அனந்த சயனம், ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி, அலமேலு, ஆறுமுகம் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கல்வராயன் மலையில் பெய்த கனமழையின் காரணமாக கோமுகி அணை நிரம்பி பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது விவசாயிகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.