Skip to main content

மணல் கடத்தலில் லஞ்சம் குவிப்பு! -கதிகலங்கும் போலீஸ் அதிகாரிகள்!

Published on 30/11/2018 | Edited on 30/11/2018

மணல் கடத்தலில் லஞ்சப் பணம் பெற்ற போலீஸ்காரர் ஒருவரை துணிச்சலாகக் கைது செய்து உள்ளே தள்ளியிருக்கிறார் நெல்லை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரான அருண்சக்தி குமார். எஸ்.பி.யின் அந்தத் துணிச்சல் நடவடிக்கை தமிழகத்தில் முன்னுதாரணமாகக் கருதப்படுகிறது என்கிறார்கள் காவல் அதிகாரிகள்.

 

Bribe in sand smuggling

 

நெல்லை மாவட்டத்தின் உவரி காவல் நிலைய போலீஸ் ஆய்வாளர் சாந்தி செல்வி, இரவு ரோந்திலிருந்த போது, மணல் லாரி ஒன்றை சோதனையிட்டிருக்கிறார். நடைச்சீட்டோ, மணல் பெர்மிட் எதுவுமில்லாமலிருந்ததால் அதைக் கைபற்றியவர், அது தொடர்பாக, உறுமன்குளம் சின்னத்துரை, முத்துக்குமார், கண்ணன் மூன்று பேரைக்கைது செய்திருக்கிறார். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், சின்னத்துரையின் செல்லை ஆய்வு செய்ததில் அதில் திசையன்விளை, காவல் ஆய்வாளரின் டிரைவரான போலீஸ்காரர் சிவாவின் வாட்ஸ்ஆப் எண்கள் ஏராளமாக இருந்ததோடு, அதில் மணல் கடத்தலுக்கு தகுந்த நேரத்தையும் குறிப்பிட்டிருந்ததோடு, மணல் கடத்தலுக்கான லஞ்சப் பணம் பல தடவை கொடுக்கப்பட்டதற்கான ஆதாரங்களும் இருந்ததை ஆவணப்படுத்திய இன்ஸ்பெக்டர், கூடுதல் தகவலாக, மணல் கடத்தப்படுவதை தடுப்பதற்காக எஸ்.பி. தனிப்பிரிவின் ஏட்டு நந்த கோபால் மேற்கொண்ட மூவ்மெண்ட் பற்றித் தெரியப்படுத்தி மணல் கும்பலை உஷார்படுத்தி மணல் கடத்தலுக்கு உதவியதையும் தெரிந்து அதிர்ந்திருக்கிறார்.

 

இதையடுத்து விசாரணை ஆதாரங்கள் முழுவதையும் எஸ்.பி.யான அருண் சக்தி குமாரிடம் தெரியப்படுத்தியிருக்கிறார். தொடர்ந்து அவரது ஆலோசணையின் படி, போலீஸ்காரர் டிரைவர் சிவாவைக் கைது செய்து அவரிடம் மேல் விசாரணை நடத்தியிருக்கிறார்.

 

Bribe in sand smuggling

 

மேலும் விசாரணையில் திசையன்விளை காவல் நிலையத்தின் முக்கிய அதிகாரிகளுக்கும் மணல் மாமூல், டிரைவர் சிவா மூலம் சென்றதும் தெரியவந்திருக்கிறது. இதையடுத்துக் கைதான சிவாவை எஸ்.பி. சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

 

தொடர்ந்து மணல் கடத்தல் கும்பலுடன் தொடர் தொடர்பிலிருந்த திசையன்விளை காவல் நிலைய ஏட்டு ஒருவர், இதன் சூத்ரதாரி என்றும் தெரியவந்துள்ளதாம். இதையடுத்து, அவர் குறிப்பிட்ட அந்த ஏட்டு தலைமறைவாகியுள்ளார். இதனால் பலர் கதிகலங்கிப் போயுள்ளனர்.

 

மணல் கடத்தலுக்கு உடந்தை, லஞ்ச விவகாரம் போன்றவை வெளியேறிய அடுத்தகணம், லஞ்சத்தில் பங்கு பெற்ற அதிகாரி ஒருவர் தனது பெயரை சொல்லிவிட வேண்டாம். பதிலுக்கு அவருக்கு உதவுவதாகக் கெஞ்சிய தகவலும் ஓடுகின்றன.

 

கடந்த வருடம் திருட்டு மணல் கொள்ளையைத் தடுக்க முயன்ற அருகிலுள்ள விஜய நாராயணம் காவல் நிலைய தனிப்பிரிவு ஏட்டு ஜெகதீஷ் நள்ளிரவில் கொலை செய்யப்பட்டு விவகாரமானதும் இந்தப் பகுதியில்தான். தற்போது போலீஸ்காரர் ஒருவர் மூலம் மணல் லஞ்சம் கைமாறியது பிடிபட்டு கைது வரை போயிருக்கிறது.

 

மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தக் காவல் லிமிட்டில் நடந்த கொலை ஒன்றில் முக்கிய குற்றவாளி மறைக்கப்பட்டதிலும் வைட்டமின் எம் கைமாறிய தகவலும் தற்போது கசியத் தொடங்கியிருக்கிறது.

 

நுங்கு தின்றவர்கள் தப்பிவிட்டனர். அதைத் தொட்டு நாவில் தடவியவர் சிக்கிக் கொண்டார் என்கிற சூசகத் தகவலும் ஒடுகிறது.

 

மணல் லஞ்ச விசாரணை முறைப்படி, நெருக்கடியின்றித் தொடருமானால், அதிகாரிகள் உட்பட போலீஸ்காரர்கள் சிக்குவார்கள் என்பதே பரவலானப் பேச்சு.

 

 

 

சார்ந்த செய்திகள்