பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதும், 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதாகவும் விளங்குவது திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில். இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த கோவிலில் ராஜ கோபுரம், வெள்ளை கோபுரம், ரங்கா ரங்கா கோபுரம் உள்ளிட்ட பெரிய கோபுரங்களும், கோவிலைச் சுற்றி சிறிய சிறிய கோபுரங்களும் உள்ளன. கோவிலின் கிழக்கு வாசல் பகுதியில் இருக்கும் கோபுரத்தில் இரண்டு அடுக்குகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் அது உடைந்து விழாமல் இருக்க கட்டைகள் விரிசல் ஏற்பட்டுள்ள இடத்தில் வைக்கப்பட்டிருந்தது.
கிழக்கு வாசல் நுழைவு கோபுரத்தின் வழியாக தினசரி பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகள் பொதுமக்கள் மற்றும் திருக்கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கடந்து செல்வதால் அசம்பாவித சம்பவம் ஏதும் நடைபெறா வண்ணம் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். விரைவில் அந்தக் கோபுரத்தில் ரூ.67 லட்சம் செலவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு கோபுரத்தில் இருந்த பூச்சுகள் அனைத்தும் பெயர்ந்து விழுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நள்ளிரவில் இந்த சம்பவம் நடைபெற்றதால் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருந்துள்ளது.
இதுதொடர்பான முதற்கட்ட விசாரணையில், கோவில் திருவிழாவின் காரணமாக கிழக்கு கோபுர வாசலின் அருகே நேற்று இரவு நாட்டு வெடி வெடித்ததாகவும், அதில் ஏற்பட்ட அதிர்வின் காரணமாகவே சுவர் இடிந்துவிழுந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், முழுமையான விசாரணை முடிந்த பிறகே சுவர் இடிந்து விழுந்ததற்கான காரணம் தெரியவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.