குமாி மாவட்டத்தில் வருவாய் துறையினரை பணிகள் செய்ய விடாமல் தடுப்பதும் அவா்கள் மீது தாக்குதல் நடத்துவதும் தொடா் கதையாக உள்ளது.
இந்த நிலையில் கிள்ளியூா் தாலுகாவிற்குட்பட்ட கருங்கல் பகுதியில் அனுமதியில்லாமல் மண் அள்ளுவதாக தாசில்தாா் கோலப்பனுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து வருவாய் அதிகாாிகளுடன் அங்கு சென்ற தாசில்தாா் கோலப்பன் மண் எடுத்து கொண்டியிருந்த அந்த நபா்களை கண்டித்து தடுத்துள்ளாா். மேலும் மண் அள்ளி செல்வதற்கு பயன்படுத்திய வாகனங்களையும் பறிமுதல் செய்ய முயன்றுள்ளாா். அப்போது அந்த நபா்கள் தாசில்தாரை தாக்க முயன்றுள்ளனா். இதனையடுத்து தாசில்தாா் அங்கிருந்து வந்துள்ளாா்.
அதன்பிறகு அங்கு சென்ற வருவாய் ஆய்வாளா் ரியாஸை அந்த நபா்கள் தாக்கியுள்ளனா். இதுகுறித்து கருங்கல் போலிசில் புகாா் கொடுத்தும் போலிசாா் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் குற்றவாளிகளுக்கு உடந்தையாக போலிசாா் செயல்பட்டு இருப்பதாக கூறி இன்று குமாி மாவட்ட வருவாய் அலுவலா்கள் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் போலிசாரை கண்டித்து ஆா்ப்பாட்டம் செய்தனா். இதில் ஏராளமான வருவாய்துறையினா் கலந்து கொண்டனா்.