இந்திய பொருளாதார சங்கத்தின்( Indian Economic Association) 101வது வருடாந்திர தேசிய மாநாடு வேலூர் அடுத்த காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக்கழகம் வளாகத்தில் டிசம்பர் 27ந்தேதி தொடங்கி 3 நாள் நடைபெறுகிறது. இன்று 27ந்தேதி காலை இதனை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைக்க உள்ளதாக இச்சங்கத்தின் தேசிய தலைவரும் விஐடி வேந்தருமான டாக்டர் ஜி.விசுவநாதன் தெரிவித்துள்ளார்.
இதுப்பற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை பல்கலைக்கழகத்தின் முதல் இந்திய பொருளாதார பேராசிரியர் முனைவர் கில்பர்ட் ஸலேட்டர், மும்பை மாநில பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பெர்சி ஆன்ஸ்டே, கல்கத்தா மாநில பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சி.ஜெ.ஹாமில்டன் மற்றும் சென்னை பொருளாதார சங்கத்தின் துணையுடன் 1917ம் ஆண்டில் இந்திய பொருளாதார சங்கத்தினை தொடங்கினார்.
100 ஆண்டுகளை கடந்து விட்ட இச்சங்கத்தின் தேசிய தலைவர்களாக பொருளாதார நிபுணர்களான இந்தியாவின் முன்னாள் பிரதமர் முனைவர் மன்மோகன்சிங் , நோபல் பரிசு பெற்ற முனைவர் அமர்த்தியா சென், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர்கள் முனைவர் ஐ.ஜி.பட்டேல், முனைவர் சி.ரங்கராஜன், முனைவர் ஓய்.வி.ரெட்டி, உலக வங்கியின் மேனாள் தலைமை பொருளாதார நிபுணர் கவுசிக் பாசு ஆகியோர் உட்பட பலர் பொறுப்பு வகித்துள்ளனர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் குண்டுரில் உள்ள ஆச்சார்யா நாகர்ஜீனா பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 27ந்தேதி முதல் 29ந்தேதி வரை இச்சங்கத்தின் முதல் நூற்றாண்டு விழா மாநாடு நடைபெற்றது. ஆந்திர மாநில ஆளுநர் இ.எஸ்.எல்.நரசிம்மன், மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, அமைதிக்கான நோபல் விருது பெற்ற முகம்மது யூனூஸ், கிராமின் வங்கி நிறுவனர் முனைவர் ரங்கராஜன் ஆகியோர் முன்னிலையில் நாட்டின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மாநாட்டினை தொடங்கி வைத்தார். அந்த மாநாட்டில் இந்திய பொருளாதார சங்கத்தின் தேசிய தலைவராக விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டார்.
இச்சங்கத்தின் 101வது ஆண்டு மாநாடு வரும் 27ந்தேதி தொடங்கி 29 வரை 3 நாட்கள் விஐடி பல்கலைக்ழகத்தில் நடைபெறுகிறது. விஐடி சமூக அறிவியல் மற்றும் மொழிகள் பள்ளியின் ( VIT School of Social Sciences and Language) வணிகவியல் துறை (Dept of Commerce) இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. 27ந்தேதி அன்று காலை 11.30 மணியளவில் இம்மாநாட்டை சங்கத்தின் தேசிய தலைவரும் விஐடி வேந்தருமான டாக்டர் ஜி.விசுவநாதன் தலைமையில் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைக்கிறார். இந்தியா முழுவதிலுமிருந்து இந்த மாநாட்டில் பொருளாதார நிபுணர்கள் பேராசிரியர்கள் பெருமளவில் வந்து பங்கேற்கின்றனர்.
இதற்காக தமிழக – ஆந்திரா எல்லையிலும், பல்கலைக்கழகத்தை சுற்றிலும் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன’’என்று தெரிவித்துள்ளார்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைக்க வருகை தருகிறாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது என்கிறது மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரம்.