விருதுநகர் மாவட்ட திமுகவில், வடக்கு மாவட்ட செயலாளரான தங்கம் தென்னரசு, தெற்கு மாவட்ட செயலாளரான கே.கே.எஸ்.எஸ்.ஆர். முன் தொடர்ந்து அடக்கியே வாசித்து வருகிறார். அதனால், விருதுநகர் மாவட்ட திமுக என்றாலே, சகலமும் அண்ணாச்சிதான் என்றாகிவிட்டது. ஆனாலும், கட்சிக்காக தன்னாலான பங்களிப்பைச் செய்தே வருகிறார் தங்கம் தென்னரசு.
கே.கே.எஸ்.எஸ்.ஆரின் தெற்கு மாவட்டத்திலுள்ள வத்திராயிருப்பு ஒன்றியத்தில் தமமுக வேட்பாளரை தங்கள் பக்கம் இழுத்து திமுகவிற்கு ‘தண்ணி’ காட்டிய ஆளும் கட்சியினர் ‘விருதுநகர் மாவட்ட திமுக ஒன்றியங்களை தட்டிப் பறிப்போம்..’ என்று கொக்கரித்து வந்த நிலையில், அதிமுகவைச் சேர்ந்த விருதுநகர் ஊராட்சி ஒன்றிய 21-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் தமிழ்ச்செல்வன், அக்கட்சியிலிருந்து விலகி தங்கம் தென்னரசு முன்னிலையில் திமுகவில் இணைந்து, ஆளும் கட்சிக்கு ‘ஷாக்’ கொடுத்திருக்கிறார்.
விருதுநகர் ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 25 வார்டுகளில் அதிமுக 14, திமுக 9, மதிமுக 1, சுயேச்சை 1 என கட்சி வாரியாக வெற்றி பெற்றுள்ளன. தற்போது 21- வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் கட்சி தாவிய நிலையில், மதிமுக 1-ஐயும் சேர்த்து திமுகவின் பலம் 11 ஆகிவிட்டது. திமுக தரப்பு காட்டிய இந்த வேகம், ஆளும்கட்சியை உசுப்பேற்றிவிட, தங்கள் கட்சி (அதிமுக) சீட் தராததால் சுயேச்சையாக நின்று வெற்றிபெற்ற 25- வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பேச்சியம்மாளை, தங்கள் பக்கம் கொண்டுவருவது எளிதான காரியமே என காய்நகர்த்தி, அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன் அவரைக் கொண்டுபோய் நிறுத்தி, கழுத்தில் துண்டு போட வைத்துவிட்டது. அதனால், விருதுநகர் ஒன்றியத்தைக் கைப்பற்றும் திமுகவின் முயற்சிக்கு பலனில்லாமல் போய்விட்டது.
ஆளும் கட்சி இத்தனை உஷாராக இருந்தும், அதிமுக ஒன்றிய கவுன்சிலர் தமிழ்ச்செல்வனை எப்படி திமுகவால் வளைக்க முடிந்ததாம்?
விருதுநகர் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கண்ணனின் ஆதிக்கத்தை தாங்கிக்கொள்ள முடியாமல், தேர்தலில் சொந்தப் பணத்தைச் செலவழித்து விரக்தியில் இருந்த தமிழ்ச்செல்வனுக்கு, விருதுநகர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசனோடு அரசியல் தொடர்பிலுள்ள பெண் ஒருவர் வழிகாட்ட, தங்கம் தென்னரசுவின் முன்னிலையில் திமுகவில் இணைந்தாராம்.
உள்ளாட்சி தேர்தலில், விருதுநகர் கிழக்கு ஒன்றியத்தைக் காட்டிலும் மேற்கு ஒன்றியத்தின்‘ரிசல்ட்’அதிமுகவுக்கு சரிவை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிமுக ஒன்றிய கவுன்சிலரே திமுக பக்கம் சென்றது, மா.செ.வும் மந்திரியுமான கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு டென்ஷனை ஏற்படுத்த, டோஸ் விழும் என்று தெரிந்தே ஒன்றிய செயலாளர் கண்ணன், தன்னுடைய செல்போனை‘ஸ்விட்ச்-ஆப்’பண்ணிவிட்டு ‘சைலன்ட்’ ஆகிவிட்டாராம்.
மனம் ஒரு குரங்கு என்று சும்மாவா சொன்னார்கள்? கட்சி விட்டு கட்சி தாவிக்கொண்டிருக்கிறார்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த மக்கள் பிரதிநிதிகள்!