கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகில் உள்ளது மணவாளநல்லூல். இங்கு பிபலமான கொளஞ்சியப்பர் கோவில் உள்ளது. இவரின் ஏவல் தெய்வமான முனியப்பரின் சன்னதி முன்பு தங்கள் வீடுகளில் களவு போன பொருட்களை திரும்ப மீட்டு தரவும் குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனைகள் தீர்த்து வைக்கவும், தீராது சீட்டு கட்டும் வழக்கம் உள்ளது. இக்கோவிலுக்கு தமிழகத்தில் இருந்து மட்டுமல்ல அயல்நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
அப்படிப்பட்ட புனிதமான இக்கோயிலில் மாமிசம், மது சாப்பிட்டுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. கரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் கோயில்களில் வழக்கமான பூஜை பணிகள், தூய்மை பணிகளை மேற்கொள்ள அறநிலைய துறை ஊழியர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளது. இதை பயன்படுத்திக்கொண்டு இக்கோயிலில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் அங்குள்ள நந்தவனத்தில் மது அருந்துவதும், மாமிசம் சாப்பிடுவது, போதை தலைக்கேறிய நிலையில் புகைப்பிடிப்பது, கோயில் வளாகத்திலேயே இயற்கை உபாதையை கழிக்கின்றனர்.
அங்குள்ள ஒரு ஊழியர் கோயில் அதிகாரி தோரணையில் தன்னுடன் இருக்கும் ஒரு நபர் இதோ மான் கறி சாப்பிடுங்கள் என்று கூறும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு காரணமாக சுமார் நான்கு மாதங்களாக கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல முடியாமல் தவித்து வரும் நிலையில் கோயில் ஊழியர்களின் அருவருப்பான இப்படிப்பட்ட செயல்பாடுகள் பக்தர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
இக்கோயில் வளாகத்தில் பசுமாடுகள், மான்கள், மயில்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. 20க்கும் மேற்பட்ட மான்கள் இருந்தன. தற்போது 10 மான்ங்கள் மட்டுமே உள்ளன. மற்றவை இறந்து போனதாக கோயில் நிர்வாகம் கூறுகின்றது. மான்கள் உண்மையிலேயே இறந்ததா? அல்லது அடித்து கொன்று கறி சமைத்து சாப்பிட்டார்களா? என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு எழுந்துள்ளது.
இக்கோயிலில் என்ன நடக்கிறது? உண்மை நிலவரம் என்ன? என்பதை அறநிலையத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து வெளிப்படுத்தவேண்டும் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதேபோல் சமீபத்தில் பழனி முருகன் கோவிலில் மது அருந்திய காவலர்கள் இருவரை அறநிலையத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அதேபோன்று விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயில் வளாகத்தில் அநாகரீகமான முறையில் கொளஞ்சியப்பரை அவமதிப்பது போன்ற செயலில் ஈடுபட்டது பக்தர்கள் மனதை நோகடிக்கும் வகையில் நடந்து கொண்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியுள்ளனர்.