அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சொத்துக் குவிப்பு புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த சில மாதங்களாக தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி. வீரமணி, தங்கமணி ஆகியோரது இல்லங்களில் அண்மையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சார்பில் சோதனை நடைபெற்றது. இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை முதல் சோதனை செய்து வருகிறார்கள். இவர் மீது பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக தொடர் புகார்கள் வந்ததையடுத்து இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அவர் வருமானத்துக்கு அதிகமாக 11.32 கோடி சொத்து சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இவரது மனைவி, மகன்கள், மருமகள் உள்ளிட்டவர்கள் மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அன்பழகன், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு சிக்கும் 6வது முன்னாள் அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.