கரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 21- ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதில், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. புதிய தளர்வுகள் வரும் ஜூன் 14- ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.
11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் என்னென்ன? என்பது குறித்துப் பார்ப்போம்!
தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள், வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகளுக்கு இ- பதிவுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மின் பணியாளர்கள், பிளம்பர்கள், கணினி, இயந்திரங்கள் பழுது நீக்குபவர்கள், தச்சர் பணிக்கு இ- பதிவுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வீடுகளுக்குச் சென்று பழுது நீக்கம் செய்ய காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும் இவ்வகை கடைகளைத் திறக்க அனுமதி இல்லை.
மிதிவண்டி, இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வாடகை வாகனங்கள், டாக்சிகள், ஆட்டோக்களில் இ- பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படும். வாடகை டாக்சிகளில் ஓட்டுநர் தவிர மூன்று பேரும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர இரண்டு பேரும் பயணிக்கலாம்.
வேளாண் உபகரணங்கள், பம்பு செட் பழுது நீக்கும் கடைகள் காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கண் கண்ணாடி விற்பனை, பழுது நீக்கும் கடைகள் காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மண்பாண்டம், கைவினைப் பொருள் விற்பனைக் கடைகளும் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கான இடுபொருள் தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கலாம். 25% பணியாளர்களுடன் ஏற்றுமதி நிறுவனங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.