





ஈரோட்டில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. ஈரோட்டை பொறுத்தவரை இந்து முன்னணி சார்பில் மாநகர்ப் பகுதியில் 100 இடங்களிலும், மாவட்டம் முழுவதும் ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவது வழக்கம். பிறகு அந்தச் சிலைகளை ஊர்வலமாக எடுத்து நீர் நிலைகளில் கரைப்பார்கள்.
ஆனால் இந்த வருடம் கரோனா வைரஸ் பரவல் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தமிழக அரசு தடைவிதித்துள்ளது. அவரவர் வீடுகளில் சிலை வைத்து வழிபடலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இந்து முன்னணி அமைப்பு சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இன்று ஈரோடு சம்பத் நகரில் இந்து முன்னணி நிர்வாகிக்குச் சொந்தமான இடத்தில் வைத்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. சிறிய அளவிலான விநாயகர் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமையில் சில நிர்வாகிகள் மட்டும் வழிபட்டனர். போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதைப்போல் மாநகர் பகுதியில் 50க்கும் மேற்பட்ட இடங்களிலும் மாவட்டம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.
ஈரோட்டில் விநாயகர் சிலைகளை பவானி ஆறு காவிரி ஆறுகளில் கரைப்பது வழக்கம். இந்த வருடம் ஊர்வலமாகச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் எவ்வித ஆரவாரமோ, கூச்சல் குழப்பமோ இல்லாமல் மத அரசியல் கோஷங்கள் இல்லாமல் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
பொதுமக்கள் தனித்தனியாக பவானி ஆறு காவிரி ஆற்றில் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு சிலர் இன்று மாலை முதல் நீர்நிலைகளில் சென்று சிலையைக் கரைத்தனர்.