விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் சீல் வைக்கப்பட்ட திரௌபதி அம்மன் கோவிலை திறக்க உத்தரவிட முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலுக்குள் ஒரு பிரிவினரை அனுமதிக்காத நிலையில் சமீபத்தில் அரசு சார்பில் கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதில் குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் வழிபாடு செய்ய மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் கோவிலுக்கு சீல் வைத்ததாக தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் வாதம் முன் வைக்கப்பட்டது.
இதனைக் கேட்டறிந்த உயர்நீதிமன்றம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை நிலவுவதால் சீல் வைக்கப்பட்ட திரெளபதி அம்மன் கோயிலைத் திறக்க மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பான விசாரணை அறநிலையத்துறை சார்பில் நடைபெற்று வருவதால் இவ்விவகாரத்தில் அறநிலையத்துறை தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து மனுதாரர் அறநிலையத்துறையை அணுகலாம் என்று கூறி மனுதாரரின் விண்ணப்பத்தை சட்டப்படி பரிசீலிக்க அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு இவ்வழக்கை முடித்து வைப்பதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.