விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள கொல்லியம் குணம் கிராமத்தில் பழமை வாய்ந்த விநாயகர் கோவில் சீரமைக்கப்பட்டு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது. இந்த குடமுழுக்கு விழாவை காண உள்ளூர் மற்றும் வெளியூர் என பக்தர்கள் ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்தனர். இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி குடமுழுக்கு விழாவிற்கு வருகை தந்த பெண் பக்தர்கள் மத்தியில் ஊடுருவி திருட வந்த பெண்கள் பலர் பெண்களிடம் இருந்து நகைகளை பறித்துள்ளனர்.
இதில் மயிலும் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் மனைவி லட்சுமி காந்தம் என்பவரிடமிருந்து ஆறு பவுன் நகையும், இறையானூர் கிராமத்தைச் சேர்ந்த அஞ்சலி என்பவரிடமிருந்து மூன்று பவுன் நகையும், கணபதி பட்டு கிராமத்தைச் சேர்ந்த மலர்விழி என்பவரிடமிருந்து மூன்று பவுன் நகை என சுமார் 15 பவுன் தங்க நகைகளை பெண்கள் திருடிச் சென்றுள்ளனர். தாங்கள் அணிந்திருந்த நகைகளை பறிகொடுத்த பெண்கள் கூச்சலிட்டு சத்தம் போட்டு உள்ளனர். இதையடுத்து மயிலம் போலீசார் அந்த கும்பலில் நகை திருட்டில் ஈடுபட்ட பெண்களை தீவிரமாக தேடினர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக அங்கு நின்றிருந்த ஐந்து பெண்கள் ஒரு ஆட்டோவில் ஏறி தப்பி செல்ல முயன்றுள்ளனர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் சந்தேகம் அடையும் வகையில் பதில் அளித்துள்ளனர்.
அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று முறையான விசாரணை நடத்தியதில் குடமுழுக்கு விழாவில் சாமி தரிசனம் செய்ய வந்த பெண்களிடம் நகைகளை திருடியதை ஒப்புக் கொண்டனர். இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பெண்களான, தஞ்சாவூர் மாவட்டம் கோரிக்குளம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மனைவி செல்வி, சங்கர் என்பவர் மனைவி ஜெயந்தி, ஆசைத்தம்பி என்பவர் மனைவி கஸ்தூரி, திருச்சி மாவட்டம் கிராப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி உமா, திருவரம்பூர் காவிரி நகர் பகுதியைச் சேர்ந்த துரைராஜ் மனைவி ராசாமணி என்பதும் இவர்கள் இங்கு மட்டுமல்லாமல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் குடமுழுக்கு விழா மற்றும் திருவிழாக்களில் மெய் மறந்து பக்தியோடு சாமி தரிசனம் செய்யும் பெண் பக்தர்களை நோட்டமிட்டு அவர்கள் தன்னிலை மறந்து இருக்கும் நேரத்தில் அவர்கள் கழுத்தில் அணிந்திருக்கும் தங்க நகைகளை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர் என்று போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ஏழரை பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.