தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த மார்ச் 15ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, கடந்த மாதம் 29ம் தேதி முதல் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. கடைசியாக கடந்த 14ம் தேதி சட்டப்பேரவை நடந்தது. 15ம் தேதி (வெள்ளி) ரம்ஜான் பண்டிகை. தொடர்ந்து சனி, ஞாயிறு அரசு விடுமுறை என்று தொடர்ந்து 10 நாட்கள் சட்டப்பேரவைக்கு விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் 10 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது.
அப்போது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ஆளுநரின் ஆய்வு குறித்து பேசுவதற்கு சட்டசபையில் அனுமதி அளிக்க வேண்டும் என கோரினார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் தனபால், சட்டசபையில் கவர்னர் பற்றி பேச முடியாது. சட்டசபை விதி 92/7 ன் படி சட்டசபையில் கவர்னர் மற்றும் ஜனாதிபதி பற்றி பேச முடியாது. கவர்னர் பற்றி பேசினால் அவை குறிப்பில் இருந்து நீக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதனை கண்டித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
இதுதொடர்பாக காங்கிரஸ் சட்டமன்ற கொறடா விஜயதாரணி நக்கீரன் இணையதளத்திடம் கூறுகையில்,
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தமிழகத்தில் செயல்படுகிறது. இப்படி இருக்கும்போது மாவட்டங்களுக்கு சென்று ஆளுநர் ஆய்வு செய்கிறார். ஆளுநரின் பணிகளை தடுத்தால் 7 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது என்று ஆளுநர் மாளிகை தரப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஆளுநர் ஆய்வு குறித்து காங்கிரஸ் சார்பில் பேச முயன்றோம். அதற்கு அனுமதிக்கவில்லை. மேலும், காங்கிரஸ் தரப்பில் உறுப்பினர்கள் இன்று பேச அவகாசம் அளிக்கப்படாது என்று சபாநாயகர் தெரிவித்தார். இதனை கண்டித்து இன்று ஒரு நாள் அவையை முழுமையாக புறக்கணித்து வெளிநடப்பு செய்தோம்.
கவர்னர் பன்வாரிலால் ஆய்வு செய்வதில் தவறு இல்லை என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறியிருக்கிறாரே?
தமிழக அரசு மத்திய அரசுடன் இணைந்து போவது மட்டுமல்ல, அடிபணிந்து செல்கிறது. அதனால்தான் அவர் அப்படி பேசுகிறார். மாநில சுயாட்சியை கைவிட்டுவிடுகிறார்கள். தமிழக மக்களின் நலன்கள் பாதிக்கப்படுகிறது என்றார்.